இதுக்கா இவ்ளோ ஹைப்? ஜப்பானுக்கு எதிராககூட சோபிக்காத 13 வயது வைபவ் சூர்யவன்ஷி.. சதமடித்த IND கேப்டன்!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர்கள் கொண்ட ஆசியக்கோப்பை தொடரானது நவம்பர் 29 முதல் டிசம்பர் 08-ம் தேதிவரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள், ஜப்பான் முதலிய 8 அணிகள் விளையாடுகின்றன.
ஏ, பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள பட்டியலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இரண்டு அணிகளும் முதல் லீக் போட்டியில் ஒருவரையொருவர் எதிர்கொண்ட நிலையில், இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அற்புதமாக தொடரை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது லீக் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி அபார வெற்றியை பதிவுசெய்துள்ளது.
மீண்டும் சொதப்பிய வைபவ்.. சதமடித்த கேப்டன் அமான்!
வெற்றியுடன் தொடங்கவேண்டிய இடத்தில் ஜப்பானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய வைபவ் சூர்யவன்ஷி மற்றும் ஆயுஸ் மத்ரே இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர். ஆனால் ஐபிஎல் ஏலத்தில் 1 கோடிக்குமேல் சென்று எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்த 13 வயது வைபவ் சூர்யவன்ஷி கடந்த போட்டியில் 1 ரன்னில் வெளியேறியது மட்டுமில்லாமல், இந்த போட்டியிலும் 23 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
சிறப்பாக விளையாடிய ஆயுஸ் மத்ரே அரைசதமடித்து வெளியேற, 4வது வீரராக களத்திற்கு வந்த இந்திய கேப்டன் முகமது அமான் 7 பவுண்டரிகளுடன் 118 பந்துகளில் 122 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட்டுடன் சென்றார். கார்த்திகேயா, மத்ரே இருவரின் அரைசதம் மற்றும் கேப்டன் அமானின் சதத்தின் உதவியால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 339/6 ரன்கள் குவித்தது.
அதன்பிறகு விளையாடிய ஜப்பான் அணி 50 ஓவர் முடிவில் 128/8 ரன்கள் மட்டுமே எடுத்து 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
அதேபோல மற்றொரு போட்டியில் யுஏஇ அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.