குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என விளாசி 35 பந்தில் சதமடித்த ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, 14 வயதில் இந்த சாதனை படைத்த முதல் உலக வீரராக வரலாறு படைத்தார்.
12 வயதில் ரஞ்சிக்கோப்பை அறிமுகம், 13 வயதில் இந்திய யு19 கிரிக்கெட் அணியில் அறிமுகம் என தொட்டதெல்லாம் தங்கமாகிவரும் சூர்யவன்ஷிக்கு, ஐபிஎல் கிரிக்கெட்டில் சதமடித்திருப்பது பெரிய உத்வேகமாக மாறியுள்ளது.
பீகாரைச் சேர்ந்த சூர்யவன்ஷிக்கு சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் என பல ஜாம்பவான் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்திருக்கும் நிலையில், பீகார் மாநில முதல்வர் 10 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து மேலும் சிறப்பித்துள்ளார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் 13 வயதில் 1.10 கோடிக்கு விலை போன சூர்யவன்ஷி, வயது குறைத்து சொன்னதாக வெளியான குற்றச்சாட்டையும் எதிர்கொண்டார். பின்பு அவருடைய தந்தை சூர்யவன்ஷியின் வயது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே யு19 அறிமுகத்தை பெற்றார் என்றும், வேண்டுமானால் மீண்டும் நிரூபிக்க தயார் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தன்னுடைய ஒவ்வொரு முன்னேற்றத்திலும் பெற்றோர்களின் பக்கபலம் இருந்ததை சூர்யவன்ஷி தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
பெற்றோர் குறித்து பேசியிருக்கும் சூர்யவன்ஷி, “என் அம்மா எனக்கான அனைத்து வேலைகளையும் செய்ய, இரவு 11 மணிக்குத் தூங்கிவிட்டு விடியற்காலை 3 மணிக்கே எழுந்துவிடுவார். பலநாள் மூன்று மணி நேரம் கூட முழுமையாக தூங்கியதில்லை.
என் அப்பா என்னுடைய கிரிக்கெட் ஆசைக்காக தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார். என் மூத்த சகோதரர் மட்டும் தான், வீடு பொருளாதார ரீதியிலும், மற்ற தேவைகளின் போது சிரமத்துடன் இருந்தநேரத்தில் மொத்த பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.
என் அப்பா எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். கடினமாக உழைப்பவர்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் என்பதை கடவுள் நிரூபித்துள்ளார். நான் அடையும் வெற்றிகளும், எனக்கு கிடைக்கும் அங்கீகாரமும் என் பெற்றோரால் மட்டுமே சாத்தியமானது” என்று பேசியுள்ளார்.