ஒரே வருடத்தில் 49 சதங்கள்.. 13 வயதில் ஆஸிக்கு எதிராக சதம்! ’யார்ரா இந்த பையன்’ சூர்யவன்ஷி?
2025 ஐபிஎல் மெகா ஏலமே வைபவ் சூர்யவன்ஷிக்கு என்று தனி கதை சொல்லும், ’யாரு பா இந்த பையன், வெறும் 13 வயசு சின்ன வயசு பையன ஏலமெடுக்க, எதுக்கு டெல்லியும், ராஜஸ்தானும் இப்படி சண்டை போட்டுக்குறாங்க’ என்றே இரண்டாவது நாள் ஏலத்தை பார்த்த எல்லோருக்கும் இருந்தது. அடிப்படை விலையான 30 லட்சத்தில் தொடங்கிய அவருடைய ஏலம், டெல்லி மற்றும் ராஜஸ்தான் இரண்டு அணிகளும் மாறிமாறி போட்டிபோட 1 கோடிவரை சென்றது. இறுதியாக 1 கோடியே 10 லட்சத்திற்கு 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷியை தட்டிச்சென்றது ராஜஸ்தான் அணி.
இளம் வயதில் ஐபிஎல்லில் பங்கேற்ற முதல் வீரர் மற்றும் இளம் வயதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் விலை போன முதல் வீரர் என ஏலத்திலேயே சம்பவம் செய்த சூர்யவன்ஷி, 14 வயதில் டி20 சதமடித்து இளம் வயதில் இதை செய்ய வீரராக உலக சாதனை படைத்து வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
’யார்ரா இந்த பையன், நான் தான் அந்த பையன்’ என 14 வயதில் உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி யார்? அவரிடம் அப்படி என்ன திறனமை இருக்கிறது? வாங்க பார்க்கலாம்..
ஒரே வருடத்தில் 49 சதங்கள்..
2011, மார்ச் 27-ம் தேதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்த வைபவ் சூர்யவன்ஷி தன்னுடைய கிரிக்கெட்டை மிகவும் இளம் வயதிலேயே தொடங்கிவிட்டார். இந்திய கிரிக்கெட் வீரர்களால் பெரிதும் மதிக்கப்படும் ரஞ்சிக்கோப்பை தொடரில் 12 வயதில் அறிமுகத்தை பெற்ற சூர்யவன்ஷி, பீகாருக்காக விளையாடினார்.
தன்னுடைய அபாரமான கிரிக்கெட் திறமையால் ரஞ்சி டிராபி, ஹேமந்த் டிராபி, கூச் பெஹர் டிராபி மற்றும் வினு மங்கட் டிராபி என பல உள்ளூர் டோர்னமெண்ட்களில் விளையாடிய சூர்யவன்ஷி, தன்னுடைய அதிபயங்கரமான சிக்ஸ் ஹிட்டிங் திறமையாலும், சிறந்த டைமிங் உதவியாலும் ஒரே வருடத்தில் 49 சதங்கள் அடித்து இந்திய கிரிக்கெட்டையே தன்பக்கம் திருப்பி பார்க்க வைத்தார்.
ஆஸிக்கு எதிராக சர்வதேச சதம்!
வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை அங்கீகரித்த பிசிசிஐ, அவரை யு-19 இந்திய அணியில் வெறும் 13 வயதில் விளையாட அனுமதித்தது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2024-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற யு19 ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விளையாட அனுமதித்தது.
அங்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வைபவ், முதல் விக்கெட்டுக்கு 19 ஓவரில் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டார். இதில் 133 பார்ட்னர்ஷிப்பில் வைபவ் சூர்யவன்ஷி அடித்தது மட்டும் 104 ரன்கள். 58 பந்துகளில் 14 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் சதம் விளாசிய சூர்யவன்ஷி, சர்வதேச யு19 கிரிக்கெட்டில் குறைவான பந்தில் சதமடித்த 2வது உலக வீரராகவும், முதல் இந்திய வீரராகவும் சாதனை படைத்தார். இவரின் அன்றைய ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள், அடுத்த சேவாக் யார் என்ற கேள்விக்கு இந்த பையன் தான் விடையாக இருக்கப்போகிறார் என்று பாராட்டு மழை பொழிந்தனர்.
14 வயதில் டி20 சதமடித்து வரலாறு..
இப்படி சென்ற இடமெல்லாம் சம்பவம் செய்த சூர்யவன்ஷி, ஐபிஎல் கிரிக்கெட்டையும் விட்டுவைக்காமல் இன்றைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 35 பந்தில் சதமடித்து எல்லோரையும் வாய்பிளக்க வைத்துள்ளார். 35 பந்தில் டி20 சதமடித்து குறைவான வயதில் டி20 சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்துள்ளார் சூர்யவன்ஷி. திறைமைகளின் கூடாரமாக இருக்கும் சூர்யவன்ஷி, இளம் வயதில் சச்சின் மற்றும் யுவராஜ் சிங் படைத்த சாதனைகளை முறியடிக்கும் ஒரு வீரராக பார்க்கப்படுகிறார்.
மிகவும் இளம் வயதில் முதல்தர கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரராக இருந்துவரும் சூர்யவன்ஷி, 14 வயதிலேயே இந்தியாவின் சர்வதேச டி20 அறிமுகத்தை பெற்று சாதனை படைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
இளம் வயதில் தன் பெயரை கிரிக்கெட் பிராண்ட்டாக மாற்ற புறப்பட்டிருக்கும் சூர்யவன்ஷி, பேர் என்னனு கேட்டல்ல ‘சூர்யவன்ஷி வைபவ் சூர்யவன்ஷி’ என முத்திரை பதித்துள்ளார். வாழ்த்துக்கள் இளம் சாம்பியன்!