2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் திரிபுரா மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் குஜராத் அணி வீரர் உர்வில் படேல் 28 பந்துகளில் சதமடித்து டி20 வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்திய வீரராக மாறி சாதனை படைத்துள்ளார்.
மந்தீப் சிங் தலைமையிலான திரிபுரா அணியும், அக்சர் பட்டேல் தலைமையிலான குஜராத் அணியும் மோதிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை அடித்தது.
156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேல் 28 பந்துகளில் சதமடித்து தனியாளாக போட்டியை முடித்துவைத்தார்.
ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத கோவமோ என்னவோ தெரியவில்லை, இறங்கியதிலிருந்தே சிக்சர், பவுண்டரிகளாக கிரவுண்ட்டின் நாலாபுறமும் சிதறடித்த உர்வில் பட்டேல் 35 பந்துகளில் 12 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார்.
அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டிலும் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக, நடப்பு 2024-ம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் எஸ்டோனியா வீரர் சாஹில் சௌஹான் 27 பந்தில் அடித்து உலக சாதனை படைத்தார். அதனை ஒரு பந்தில் மிஸ் செய்துள்ளார் இந்திய வீரர் உர்வில் படேல்.
ஆனால் அதேசமயம் அதிவேக டி20 சதமடித்த இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட்டின் (32 பந்துகள் - முஸ்டாக் அலி டிரோபி) சாதனையை முறியடித்து முதல்வீரராக வரலாறு படைத்துள்ளார். இவரின் இந்த சாதனை முறியடிக்கப்பட பல காலங்கலாவது நிச்சயம் எடுக்கும்.
இப்படிப்பட்ட வீரர் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சரியாக இதே நாளில், குஜராத் டைட்டன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட பிறகு, சண்டிகரில் நடைபெற்ற அருணாச்சல பிரதேசத்திற்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியிலும் உர்வில் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த அபாரமான ஆட்டத்திற்கு பிறகு ஏதாவது ஐபிஎல் அணி அவரை ஒப்பந்தம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.