2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடைபெற்ற தொடரில் 38 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் தகுதிபெற்றன.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை மற்றும் ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். 13 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் மத்திய பிரதேச அணி நல்ல இலக்கை நிர்ணயிக்கும் எண்ணத்தில் களம்கண்டது.
ஆனால் 2வது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர் மத்திய பிரதேச அணியை தொடக்கத்திலேயே பேக்ஃபுட்டில் போட்டார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொதப்ப தனியாளாக போராடிய கேப்டன் ரஜத் பட்டிதார் 40 பந்தில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 81 ரன்கள் குவித்து அசத்தினார்.
ரஜத் பட்டிதார் உதவியால் 174 ரன்களை மத்திய பிரதேசம் எட்ட, 175 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி இரண்டாவது பேட்டிங் செய்தது.
மும்பை அணியில் அனைத்து பேட்ஸ்மேன்களும் அவர்களுடைய சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். அதிகபட்சமாக 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என விளாசிய சூர்யகுமார் யாதவ் 48 ரன்கள் விளாசினார். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ரஹானே 37 ரன்கள் அடித்தார். இறுதியாக வந்து பயமில்லாமல் மிரட்டிய 21 வயது சூர்யன்ஷ் ஷெட்ஜ் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு வெற்றியை உறுதிப்படுத்தினார்.
17.5 ஓவரில் 180 ரன்களை எட்டிய மும்பை அணி 2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியை வென்று மகுடம் சூடியது. மும்பை அணியின் 21 வயது வீரர் சூர்யன்ஷ் ஷெட்ஜ் ஆட்டநாயகனாகவும், 36 வயதான அஜிங்கியா ரஹானே தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றனர்.
2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், 2024 ரஞ்சி டிரோபி மற்றும் 2024 இரானி கோப்பையிலும் வீரராக கோப்பையை வென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது 2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியையும் கேப்டனாக கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரே வருடத்தில் நான்கு கோப்பைகளை வென்று அசத்தியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தொட்டதெல்லாம் தங்கமாகும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 2025 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கு விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.