asia cup, ind v pak x pag
T20

ஆசியக் கோப்பையில் 3 முறை மோதும் Ind - Pak.. BCCIயைக் கடுமையாக விமர்சித்த சிவசேனா!

ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் எனச் சொல்லப்படுகிறது. இது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், அரசியல் ரீதியாகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

Prakash J

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருதரப்பிலான கிரிக்கெட் தொடர்களும் இனி நடைபெறாது எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை திட்டமிட்டபடி நடைபெறுமா எனக் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பை

அதன்படி, ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 தொடங்கி செப்டம்பர் 28 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகள் இடம்பெற்றுள்ளன. குரூப் B-ல் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. தவிர, இரு அணிகளும் சூப்பர் 4 மற்றும் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெறும் எனச் சொல்லப்படுகிறது. இது, ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருப்பதுடன், அரசியல் ரீதியாகவும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, பிசிசிஐயைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர், “இந்த நேரத்தில் இஸ்லாமாபாத்துடன் கிரிக்கெட் உறவுகளை மீண்டும் தொடங்குவது சபிக்கப்பட்ட பணத்தைச் சம்பாதிப்பதற்குச் சமம்” என விமர்சித்துள்ளார். தவிர, இந்தியா/பாகிஸ்தான் போட்டியை நேரடியாகக் காட்டும் அனைத்து ஸ்ட்ரீமிங் செயலிகளையும் ஒளிபரப்பு சேனல்களையும் தடை செய்யுமாறு அவர் வலியுறுத்தி உள்ளார்.

பிசிசிஐ

அதேநேரத்தில், ’பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிக்கு இந்திய அணியை, பிசிசிஐ அனுப்புவதை அரசாங்கத்தால் தடுக்க முடியாது’ என விளையாட்டு அமைச்சகம் சொன்னதாக பிடிஐ தெரிவித்துள்ளது. மேலும், ‘தற்போதைக்கு, தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால், பிசிசிஐ விளையாட்டு அமைச்சகத்தின் வரம்பிற்குள் வரவில்லை. ஆனால் பிசிசிஐ பொதுமக்களின் உணர்வுகளுக்கு எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடனான எந்தவொரு இருதரப்பு விளையாட்டு ஈடுபாடும் கேள்விக்கு அப்பாற்பட்டது என்று அமைச்சகம் கூறியிருந்தாலும், பலதரப்பு போட்டிகளுக்கு அது ஒலிம்பிக் சாசனத்தின்படி செல்லும். அரசியல் பிரச்னைகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை சாசனம் தடைசெய்கிறது. மேலும், அதைப் பின்பற்றுவது 2036 ஒலிம்பிக்கை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு மிக முக்கியமானது ஆகும். முன்னதாக, இங்கிலாந்தில் நடைபெற்றும் லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதியில் மோத இருந்தது. ஆனால், இந்திய வீரர்கள் அதில் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நேரிடையாக இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது.