சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் 197 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரச்சின் ரவீந்திரா மட்டும் நிதானமாக விளையாடி 41 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில், ஆட்டம் இக்கட்டான சூழலில் இருந்தபோது தோனி முன்னதாகக் களமிறங்காமல் 9வது வீரராக களமிறங்கியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆர்சிபி மற்றும் மும்பை அணிக்குக்கூட அதிக அளவு ரசிகர்கள் இருந்தாலும்கூட சிஎஸ்கே ரசிகர்கள் கூட்டம் தனி ரகமானது. இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட காலத்திலும், தோல்விகள் சந்தித்த நேரங்களிலும், கேப்டன்சி மாற்றத்தில் ஏற்பட்ட தடுமாற்றத்தின்போதும் என எப்போதுமே தங்களது அணியை ரசிகர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவே இல்லை. சிஎஸ்கேவின் ரசிகர்களில் 95 சதவீதம் பேர் தோனியின் ரசிகர்களே. சென்னையை தாண்டியும் சிஎஸ்கே விளையாடும் மற்ற ஊர்களுக்கும் படையெடுத்துச் சென்று மைதானத்தையே மஞ்சள் மயம் ஆக்குவார்கள். இது, மற்ற எந்த அணிக்கும் கிடைக்காத ஒரு விஷயம். அப்படிப்பட்ட சிஎஸ்கே மற்றும் தோனியின் ரசிகர்கள் நேற்றையப் போட்டியின் முடிவிற்குப் பிறகு கடும் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்கள் முழுவதும் தோனிக்கு எதிராக மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன. அப்படி அவர்கள் கோபம் கொள்ளும் அளவிற்கு என்னதான் நடந்தது?
197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி, இரண்டாவது ஓவரிலேயே திரிபாதி, கெய்க்வாட் விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த தீபக் ஹூடாவும் 4 ரன்களில் வெளியேற பவர் பிளேவில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகாவது, விக்கெட் சரிவை நிறுத்தி அதிரடிக்கு திரும்புவார்கள் என்று பார்த்தால் சாம் கரன் 8 ரன்களில் நடையைக் கட்டினார். இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஷிவம் துபே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தார். ஆனால், யஷ் தயாள் வீசிய 13ஆவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா 41 ரன்களிலும், துபே 19 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது அதிர்ச்சி கொடுத்தார்கள். துபே ஆட்டமிழந்தபோது சென்னை அணிக்கு 43 பந்துகளில் 117 ரன்கள் தேவையாக இருந்தது. கிட்டத்தட்ட 17 ரன் ரேட் தேவை. ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை இது மிகவும் கடினமான ஒன்றுதான். ஆனாலும் ஹிட்டர்கள் இருந்தால் அடிக்கக் கூடியதே. அப்படியான ஒரு சூழலில் அடுத்ததாக அஸ்வின் களமிறங்கியது பலருக்கும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
அஸ்வினும் 11 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க, தோனி ஆட வந்தார். அப்போது 4.8 ஓவர்களில் சென்னை அணிக்கு 98 ரன்கள் தேவை. கிட்டத்தட்ட டிராவிஸ் ஹெட் - அபிஷேக் ஷர்மா ஜோடியைப் போல் ஒரு ஆட்டம் ஆடினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற சூழலில் தோனி வந்து சேர்ந்தார். சந்தித்த முதல் 4 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் தோனி. 17வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கேவின் தோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில், ஜடேஜா 22 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி 19வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளும், கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரியும் விளாசினார்.
*இக்கட்டான சூழலில் அஸ்வினுக்கு முன்பே தோனி களமிறங்காதது ஏன்?
*வெறும் இரண்டு ஓவர்கள் மட்டுமே ஹிட் அடிக்கும் திறன் இருக்கும் என்றால், அடுத்த இளம் வீரர்களுக்கு இடம் கொடுக்கலாம் தானே?
*அணி தோற்றாலும் கடைசி ஓவர்களில் மட்டும் இறங்கி சிக்ஸர்கள் விளாசுவதை ரசிக்கும் மனநிலையில் ரசிகர்கள் இல்லை.
*ஒரு வீரர் அணிக்கு சராசரியாக பல நேரங்களில் 40-50 ரன்கள் வழங்க வேண்டும். வெறும் 20-30 ரன்கள் எப்படி போதுமானதாக இருக்கும்?
*தோனி 5வது, 6வது வீரராக களமிறங்குவதே சரியாக இருக்கும். இதைத்தான் ரசிகர்களும் விரும்புகிறார்கள்.
சிஎஸ்கேவின் அணுகுமுறை குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ராபின் உத்தப்பா தன்னுடைய எக்ஸ் தளத்தில், “ஆர்சிபிக்கு முக்கியமான வெற்றி. சேப்பாக்கம் மைதானத்திலேயே வெற்றி பெற்றுள்ளது அந்த அணிக்கு இந்த வருடம் மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுக்கும். தோனி 9வது வீரராக களமிறங்கியதில் எவ்வித சென்சும் இல்லை. அவர் முன்பாகவே களமிறங்கி விளையாடினால் சிஎஸ்கேவுக்கு நெட் ரன் ரேட் உயரவாவது இடம் கொடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதானும் விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அதாவது ”தோனி 9வது வீரராக களமிறங்குவதை ஒருபோதும் நான் ஆதரிக்க மாட்டேன். அது அணிக்கு சரியானது அல்ல” என்று காட்டமாக கூறியிருந்தார்.
இவர்களை தாண்டி முக்கிய கிரிக்கெட் விமர்சகர்களும், வர்ணனையாளர்கள் பலரும் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
16 பந்துகளில் 30 ரன்கள் அடிக்கும் அளவிற்கு தோனியிடம் ஹிட்டிங் பவர் இருக்கும்போது, ஏன் 5ஆவது, 6ஆவது வீரராக களமிறங்கக் கூடாது. கடந்த சீசனிலும் பல போட்டிகளில் தோனி சிக்ஸர்களை பறக்கவிட்டார். ஆனால், ஒரு அணியாக பிளே ஆஃப்கூட போக முடியவில்லையே.
அதனால், அணியின் வெற்றியை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் தோனி களமிறக்கப்படுவது குறித்து அணி நிர்வாகம் ஒரு முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது.