2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது. பரபரப்பாக நடைபெற்ற தொடரில் 38 அணிகள் கோப்பைக்காக போட்டிப்போட்ட நிலையில், இறுதிப்போட்டிக்கு மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் தகுதிபெற்றன.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை மற்றும் ரஜத் பட்டிதார் தலைமையிலான மத்திய பிரதேச அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் விளையாடிவருகின்றன.
பரபரப்பான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். 13 வருடங்களுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கும் மத்திய பிரதேச அணி நல்ல இலக்கை நிர்ணயிக்கும் எண்ணத்தில் களம்கண்டது.
ஆனால் போட்டியின் இரண்டாவது ஓவரை வீசவந்த ஷர்துல் தாக்கூர் மத்திய பிரதேச அணியின் இரண்டு தொடக்க வீரர்களையும் ஒரேஓவரில் வெளியேற்றி அசத்தலான தொடக்கத்தை மும்பைக்கு ஏற்படுத்தி கொடுத்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மத்திய பிரதேச அணி 9 ஓவர் முடிவில் 54 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதற்குபிறகு களத்திற்கு வந்த மத்திய பிரதேச கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக 6 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என துவம்சம் செய்து 40 பந்தில் 81 ரன்கள் குவித்தார்.
ரஜத் பட்டிதாரின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 174 ரன்களை குவித்துள்ளது மத்தியபிரதேச அணி.