Virat Kohli
Virat Kohli PTI
T20

16 வருடமாகப் போராடும் கோலி.. 9 ஆண்டாக தொடரும் சோகம்! RCB அணியை வீழ்த்தி KKR வெற்றி!

Rishan Vengai

9 வருசமாச்சு ஆர்சிபி அணி பெங்களூரு மண்ணில் வைத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி. 2015-ம் ஆண்டுக்கு பிறகு ஆர்சிபி அணியின் சொந்த மண்ணான பெங்களூரு சின்னசாமி மைதானத்தை தங்களுடைய கோட்டையாகவே மாற்றிவைத்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. எவ்வளவு தான் போராடினாலும் கேகேஆர் அணியை ஆர்சிபி அணியால் வீழ்த்தவே முடியவில்லை.

எப்படியாவது இந்த மோசமான சாதனையை உடைக்கும் முயற்சியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாடியது ஆர்சிபி அணி. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்த போதே, ஆர்சிபி அணியின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால் நல்ல பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, எப்படியும் 200 ரன்களை எடுத்துவந்து போட்டியில் வெற்றிபெறும் என்ற எதிர்ப்பார்ப்புடன் போட்டி தொடங்கப்பட்டது.

தனியாளாக போராடிய விராட் கோலி!

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய KKR பவுலர்கள், ஒரு பக்கா பிளானுடன் களமிறங்கினர். சிறிய ஸ்டேடியமான பெங்களூருவில் ஸ்லோ பவுன்சர்களை பெரிய ஆயுதமாக பயன்படுத்திய வேகப்பந்துவீச்சாளர்கள், 2வது ஓவரிலேயே ஆர்சிபி கேப்டன் டூபிளெசியை வெளியேற்றி கலக்கிப்போட்டனர். விரைவாகவே முதல் விக்கெட்டை இழந்தாலும் சிறந்த டச்சில் இருந்த விராட் கோலி சிக்சர், பவுண்டரிகள் என விரட்டி ரன்களை எடுத்துக்கொண்டே இருந்தார். உடன் கைக்கோர்த்த கேம்ரான் கிரீனும் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட 8 ஓவர்களுக்கே 80 ரன்களை எடுத்துவந்தது ஆர்சிபி அணி.

virat kohli

எப்படியும் நல்ல டோட்டலை ஆர்சிபி அணி எட்டிவிடும் என நினைத்த நிலையில், சிறப்பாக பந்துவீசிய ரஸ்ஸல் க்ரீனை போல்டாக்கி விக்கெட்டை எடுத்துவந்தார். விக்கெட்டை இழந்தாலும் களத்தில் க்ளென் மேக்ஸ்வெல்லும், விராட் கோலியும் நீடித்தனர். 3 பவுண்டரிகள் 1 சிக்சர் தன்னுடைய பாணியில் அதிரடிக்கு திரும்பிய மேக்ஸ்வெல்லை, சரியான நேரத்தில் சுனில் நரைன் வெளியேற்ற, அங்கு தான் ஆர்சிபி அணி போட்டியில் சரிவை நோக்கி நகர்ந்தது.

virat kohli

மேக்ஸ்வெல் வெளியேற அடுத்தடுத்து களத்திற்கு வந்த ரஜத் பட்டிதார் மற்றும் அனுஜ் ராவத் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 83 ரன்கள் அடிக்க, இறுதியாக களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் 3 சிக்சர்களை பறக்கவிட்டு 8 பந்தில் 20 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி 182 ரன்கள் மட்டுமே எடுத்தது.

காட்டடி அடித்த சுனில் நரைன்!

183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் மற்றும் சால்ட் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். RCB அணி என்றாலே அடிதான் என்று விளையாடிய சுனில் நரைன் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்ட, மறுமுனையில் இருந்த சால்ட் அவருடைய பங்கிற்கு பட்டையை கிளப்பினார். 6 ஓவர்களுக்கே 80 ரன்களை எட்டிய இந்த ஜோடி, கொல்கத்தா அணியின் வெற்றியை எளிதாக்கியது.

sunil narine

அடுத்தடுத்து களத்திற்கு வந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் என மிரட்டிவிட 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஆட்டநாயகனாக 500வது டி20 போட்டியில் விளையாடிய சுனில் நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எவ்வளவுதான் விராட் கோலி போராடுவார்!

ஆர்சிபி அணிக்காக தனியாளாக போராடிய விராட் கோலி குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “தனியாளாக விராட் கோலி எவ்வளவுதான் போராடுவார். அவருடன் ஒரு வீரராவது நின்றிருந்தால் 83 ரன்கள் அடித்த இடத்தில் அவர் 120 ரன்கள் அடித்திருப்பார். விராட் கோலி ஒருவரால் மட்டுமே போட்டியை வென்றுவிடமுடியாது” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அதேபோல “நீங்க பேசாம வேற டீமுக்கு போயிடுங்க விராட்” என ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது கொல்கத்தா அணி.