2025 ஐபிஎல் ஏலத்தில் சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு சென்ற பின்னர் ‘டெவால்ட் பிரேவிஸ், ஆயுஸ் மாத்ரே’ முதலிய வீரர்களை அணிக்குள் எடுத்துவந்தது.
சிஎஸ்கேவில் இணைந்த 21 வயது மற்றும் 17 வயது இளம் வீரர்களான டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ஆயுஸ் மாத்ரே இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், சிஎஸ்கே அணியிலிருக்கும் மிகப்பெரிய குறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான உர்வில் பட்டேலை அணிக்குள் கொண்டுவந்து ஸ்மார்ட் மூவ் செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை அணி ஆரம்பித்திலிருந்து சொதப்பிய போது ‘அந்த ஷைக் ரசீத், வன்ஷ் பேடி’ ரெண்டு பேரையும் அணிக்குள்ள எடுத்துட்டு வாங்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் வேண்டுகோளை வைத்துவந்தனர். அந்தளவு ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு வீரராக இருந்த வன்ஷ் பேடி, பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்ததால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
டெல்லி பிரீமியர் லீக்கில் அனைவரையும் கவர்ந்த வன்ஷ் பேடியை சிஎஸ்கே மெகா ஏலத்தில் ரூ.55 லட்சம் கொடுத்து எடுத்த்திருந்த நிலையில், தற்போது அவருக்கு பதிலாக குஜராத்தை சேர்ந்த உர்வில் பட்டேல் அடிப்படை விலையான ரூ.30 லட்சத்திற்கு சிஎஸ்கே அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் உள்ள பரோடாவை சேர்ந்த 26 வயதான உர்வில் பட்டேல், 2023 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் இடம்பெற்றிருந்தார். அதற்குபிறகு 2024 ஐபிஎல் ஏலத்தில் வாய்ப்பு கிடைக்காத அவருக்கு, 2025 ஐபிஎல் ஏலத்திலும் யாரும் எடுக்கவில்லை.
தன்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கோவத்தை சையத் முஷ்டாக் அலி தொடரில் வெளிப்படுத்திய உர்வில் பட்டேல், 28 பந்தில் டி20 சதமடித்து 1 பந்தில் உலக சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டாவது அதிவேக டி20 சதமடித்த வீர்ராகவும், முதல் இந்திய வீரராகவும் வரலாறு படைத்தார். அதுமட்டுமில்லாமல் அடுத்த போட்டியில் 36 பந்திலும் டி20 சதமடித்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
ஒட்டுமொத்தமாக 2024-2025 சையத் முஷ்டாக் அலி தொடரில், 6 போட்டிகளில் 29 சிக்சர்களை பறக்கவிட்ட உர்வில் பட்டேல், ஒவ்வொரு 4 பந்துக்கும் ஒரு சிக்சரை அடித்து மிரட்டிவிட்டார். அவருடைய ஸ்டிரைக்ரேட் 229.9ஆக இருந்தது.
டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 35 போட்டிகளில் விளையாடியுள்ள உர்வில், 18-.8 ஸ்டிரைக்ரேட் உடன் 951 ரன்கள் எடுத்துள்ளார். அதில் மூன்று அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்களும் அடங்கும், அவரால் டாப் 3-க்கு பிறகும் பேட்டிங் செய்யமுடியும்.
சிஎஸ்கே அணியில் இருக்கும் மிகப்பெரிய குறை என்றால் அது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யாருமே இல்லாதது மட்டும்தான். தோனி மட்டுமே அந்த இடத்திற்கான ஒரே நபராக இருக்கும் பட்சத்தில், 26 வயதான உர்வில் பட்டேல் ஒரு விக்கெட் கீப்பராக இருப்பது சிஎஸ்கே அணிக்கு பெரிய சாதகமாக அமைந்துள்ளது.
ஒருவேளை உர்வில் பட்டேல் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தும் பட்சத்தில், அவர் சிஎஸ்கேவின் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. விக்கெட் கீப்பிங் மற்றும் ஸ்டம்பிங்கிலும் குறிப்பிடத்தக்க சாதனையை உர்வில் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.