”என்னையா ஏலம் எடுக்கல..” நேற்று 28 பந்தில் சதம்.. இன்று 36 பந்தில் சதம்! மிரளவைக்கும் குஜராத் வீரர்!
2024 சையத் முஷ்டாக் அலி டிரோபியானது நவம்பர் 23 முதல் தொடங்கி டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படாத கோவத்தில் குஜராத்தை சேர்ந்த 26 வயதான உர்வில் படேல் டி20 சதங்களாக அடித்து மிரட்டிவருகிறார்.
இதற்கு முன்பு நவம்பர் 27ம் தேதி நடைபெற்ற திரிபுரா அணிக்கு எதிரானப் போட்டியில் 28 பந்துகளில் டி20 சதமடித்து, டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய வீரராக மாறி சாதனை படைத்தார்.
இந்நிலையில், மீண்டும் 36 பந்துகளில் சதடித்து மிரட்டியுள்ளார்.
மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் உர்வில் படேல்..
உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் உர்வில் பட்டேலின் குஜராத் அணி மோதியது. முதலில் விளையாடிய உத்தரகாண்ட் அணி 20 ஓவர் முடிவில் 182 ரன்கள் குவித்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய குஜராத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் பட்டேல் 41 பந்துகளில் 8 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் என விளாசி 115 ரன்கள் குவித்தார்.
உர்வில் பட்டேலின் அதிரடி சதத்தால் 13.1 ஓவரில் இலக்கை எட்டிய குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக சாதனை..
கடந்த போட்டியில் அதிவேக டி20 சதமடித்த இந்திய வீரராக வரலாற்று சாதனை படைத்த உர்வில் பட்டேல், இந்த போட்டியில் 40 பந்துகளுக்கு குறைவாக இரண்டு டி20 சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.
திரிபுரா அணிக்கு எதிராக 28 பந்தில் டி20 சதமடித்த அவர், உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 36 பந்தில் சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்த அதிரடியான சதங்களுக்கு பிறகாவது ஏதாவது ஐபிஎல் அணி அவரை ஒப்பந்தம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.