rcb vs csk
rcb vs cskcricinfo

CSK தோல்விக்கு அம்பயரே காரணம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்! 2 ரன்னில் RCB த்ரில் வெற்றி! என்ன நடந்தது?

2025 ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை 2 ரன்னில் வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது ஆர்சிபி அணி.
Published on

ஐபிஎல் வரலாற்றில் ’இதுதான் டா ஆட்டம்’ என்ற சிறந்த மோதலை நிகழ்த்தி கடந்த 2 ஆண்டுகளில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் வாழ்வா-சாவா யுத்தத்தை நடத்திவருகின்றன.

ஒரு காலத்தில் சென்னை-மும்பை மோதுகிறது என்றாலே ஆட்டம் வேறமாதிரியாக இருக்கும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது, ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், சமீபகாலமாக ஒரு யுத்தத்தையே நிகழ்த்தி வருகின்றன ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள்.

rcb vs csk
rcb vs csk

அதிலும் கடந்த சீசனில் நடந்த மே 18 மோதலுக்கு பிறகு, இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதலானது கிரவுண்ட்டில் மட்டுமில்லாமல், பொதுவெளியிலும், சமூக வலைதளங்களிலும் இரண்டு அணி ரசிகர்களுக்கும் இடையில் ஒரு எரிமலை மோதலையே உண்டுசெய்துவருகின்றன. ஏதோ பரம எதிரிகளை போல இரண்டு அணி ரசிகர்களும் மோதிவருகின்றனர்.

ஜெயில் ஜெர்சி விற்பனை செய்த ஆர்சிபி ரசிகர்கள்!

இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே சிஎஸ்கே அணியை கிண்டல் செய்யும் விதமாக, 2 ஆண்டுகள் தடைசெய்யப்பட்டதை நினைவுகூறும் வகையில் 2016, 2017 என்ற எண்கள் கொண்ட ஜெயில் ஜெர்சியை அச்சடித்து ஸ்டேடியத்திற்கு வெளியே விற்பனை செய்தது பெரிய பேசுபொருளாக வெடித்தது.

இப்படி போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே இரண்டு அணி ரசிகர்களின் மோதல் தீயாக இருந்த நிலையில், தொடங்கப்பட்ட ஆட்டமும் அனல்பறக்கும் ஒரு ஆட்டமாகவே அமைந்தது.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் நல்ல டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.

புயலாக வந்த ஷெப்பர்ட்.. 2 ஓவரில் 54 ரன்கள் குவிப்பு!

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஜேக்கப் பெத்தெல் இருவரும் அதிரடி சரவெடி என பட்டாசாக வெடித்து சிதறினர். 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த பெத்தெல் 55 ரன்கள் அடித்து அசத்த, 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என நாலாபுறமும் வானவேடிக்கை காட்டிய விராட் கோலி 62 ரன்கள் அடித்து மிரட்டிவிட்டார். இருவரும் சேர்ந்து 12 ஓவரில் 121 ரன்களுக்கு ஆர்சிபியை எடுத்துசெல்ல, 240 ரன்கள் வரும் என்ற நிலையில் ஆர்சிபி அணி வலுவான இடத்தில் இருந்தது.

ஆனால் 11 ஓவருக்கு 114 ரன்களை விட்டுக்கொடுத்த சிஎஸ்கே அணி, அடுத்த 7 ஓவரில் வெறும் 45 ரன்களை மட்டுமே கொடுத்து தரமான கம்பேக் கொடுத்து. ஆர்சிபியின் அதிரடி வீரர்களான ரஜத் பட்டிதார், படிக்கல் மற்றும் ஜிதேஷ் சர்மா 3 பேரையும் திணடித்த நூர் அகமது மற்றும் பதிரானா இருவரும் ஒரு அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி கலக்கிப்போட்டனர்.

18 ஓவர் முடிவில் 159 ரன்களையே ஆர்சிபி அணி அடித்திருக்க, எப்படியும் அடுத்த 2 ஓவரில் 20 ரன்கள் தான் வரும் 190-க்குள் டார்கெட் என்றால் சிஎஸ்கே வென்றுவிடும் என்ற எண்ணமே எல்லோருக்கும் இருந்தது.

ஆனால் ’எங்கிருந்துயா வந்தாரு இவரு’ என களத்திற்கு வந்த ரொமாரியோ ஷெப்பர்ட், கலீல் அகமது வீசிய ஓரே ஓவரில் 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் என பறக்கவிட்டு ருத்ரதாண்டவம் ஆடினார். அதுமட்டுமில்லாமல் பதிரானா வீசிய கடைசி ஓவரிலும் 21 ரன்களை அடித்து நொறுக்கிய ஷெப்பர்ட் 14 பந்தில் அரைசதமடித்து சிஎஸ்கே ரசிகர்களின் தலைமேல் இடியை இறக்கினார். கடைசி 2 ஓவரில் மட்டும் சிஎஸ்கே 54 ரன்களை விட்டுக்கொடுக்க 213 ரன்கள் என்ற வலுவான ஒரு டோட்டலை சேர்த்தது ஆர்சிபி அணி.

94 ரன்கள் குவித்து மிரட்டிய 17 வயது சிறுவன்..

214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணியும், ஆர்சிபிக்கு பதிலடி கொடுக்கும் ஒரு ருத்ரதாண்டவ பேட்டிங்கையே வெளிப்படுத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய 17 வயது இளம் வீரர் ஆயுஸ் மாத்ரே 9 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என பறக்கவிட்டு ஆர்சிபி அணிக்கு மரண பயத்தை காட்டினார்.

மறுமுனையில் 29 பந்தில் அரைசதமடித்த ரவீந்திர ஜடேஜா வேறஒரு பேட்ஸ்மேனாக மாறி துவைத்தெடுத்தார். 3வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடி, சென்னை அணியை 16 ஓவரில் 171 ரன்களுக்கு எடுத்துவந்து அசத்தியது. போதாக்குறைக்கு கைக்கு வந்த கேட்ச்சை எல்லாம் கோட்டைவிட்ட ஆர்சிபி ஃபீல்டர்கள் மோசமான ஒரு நிலைமைக்கு ஆர்சிபி அணியை எடுத்துச்சென்றனர்.

கடைசி 4 ஓவரில் 43 ரன்கள் மட்டுமே தேவை, கையில் 8 விக்கெட் இருக்கிறது என்ற வலுவான நிலையில் சென்னை அணி இருக்க, சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆயுஸ் மாத்ரேவை 94 ரன்னில் வெளியேற்றிய லுங்கி இங்கிடி கலக்கிப்போட்டார். அடுத்தபந்திலேயே டெவால்ட் பிரேவிஸ்-ம் 0 ரன்னுக்கு வெளியேற, 2 பந்தில் 2 விக்கெட்டை கைப்பற்றிய இங்கிடி சிஎஸ்கே அணிக்கு அடிக்குமேல் அடி கொடுத்தார்.

போதாக்குறைக்கு ஷிவம் துபேவுக்கு பதிலாக தோனி களமிறங்க, அதை சரியாக பயன்படுத்தி கொண்ட ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் லெக் ஸ்பின்னர் சுயாஷ் சர்மாவை களமிறக்கி ஸ்மார்ட் மூவ் செய்தார். 18வது ஓவரில் சுயாஷ் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, கடைசி 2 ஓவருக்கு 29 ரன்கள் அடித்தால் வெற்றி என மாறியது போட்டி.

த்ரில் வெற்றிபெற்ற ஆர்சிபி..

19வது ஓவரை அனுபவம் வாய்ந்த புவனேஷ்வர் குமார் வீசினாலும், ஜடேஜா பவுண்டரியும், தோனி சிக்சரும் அடிக்க 14 ரன்களை எடுத்துவந்தது சென்னை அணி. இறுதி 6 பந்துக்கு 15 ரன்கள் தேவையென போட்டி மாற முதல் 2 பந்தில் இரண்டு ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த யஷ் தயாள் 3வது பந்தில் தோனியை வெளியேற்றி சிஎஸ்கே அணியின் நம்பிக்கையை உடைத்தெறிந்தார்.

ஆனால் இறுதி 3 பந்துக்கு 13 ரன்கள் என இருந்தபோது 4வது பந்தை நோ பாலாக வீசிய யஷ் தயாள் அதில் சிக்சரையும் விட்டுக்கொடுக்க 3 பந்துக்கு 6 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இடத்திற்கு சென்றது சென்னை அணி. ஒருகணம் ஆர்சிபி அணியின் கையிலிருந்த ஆட்டம் சிஎஸ்கேவின் கைகளுக்கு சென்றது.

அவ்வளவுதான் சிஎஸ்கே வென்றுவிடும் என நினைத்தபோது, கடைசி 3 பந்துகளையும் தரமாக வீசிய யஷ் தயாள் 2 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணிக்கு த்ரில் வெற்றியை தேடித்தந்தார். கையில் இருந்த போட்டியை கோட்டைவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த வெற்றியின் மூலம் 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது ஆர்சிபி. 2 ஓவரில் 54 ரன்கள் அடித்து வெற்றிக்கு காரணமாக இருந்த ஷெப்பர்ட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிஎஸ்கே தோல்விக்கு அம்பயர் காரணமா?

சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தபோது டெவால்ட் பிரேவிஸ்க்கு எதிராக அம்பயர் கொடுத்த மோசமான அவுட் என்ற முடிவே, சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. லெக் ஸ்டெம்பை கடந்து எங்கேயே சென்ற பந்தை அவுட் என அம்பயர் கைத்தூக்க, என்ன நடக்கிறது என்று கணிப்பதற்குள்ளாகவே டெவால்ட் பிரேவிஸ்க்கு ரிவ்யூ எடுப்பதற்கான டைமிங் முடிந்துபோனது.

ஆனால் அம்பயரின் இந்த முடிவை விமர்சித்துவரும் ரசிகர்கள், டெவால்ட் பிரேவிஸ்க்கு LBW கொடுக்கும்போது ஸ்க்ரீனில் டைமர் ஓடவே இல்லை, பிறகெப்படி அவரை ரிவ்யூ கேட்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியபோது டைமர் முடிந்தபிறகு ரோகித் சர்மா ரிவ்யூ கேட்டதை பதிவிட்டுவரும் ரசிகர்கள் மும்பைக்கு ஒரு நியாயம் சிஎஸ்கேவுக்கு ஒரு நியாயமா என விரக்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியின் முக்கியமான தருணத்தில் அம்பயர் கொடுத்த அந்த அவுட்டானது ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியது.

எல்லாவற்றையும் கடந்து சிஎஸ்கேவை வெற்றியின் அருகாமை வரை கொண்டு சென்ற 17 வயது ஆயுஸ் மாத்ரே சிஎஸ்கேவின் இளைய தளபதியாக இனிவரும் சீசன்களில் அசத்தப்போகிறார் என்றால் மிகையாகாது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com