ராஜிவ் சுக்லா, ரோகித் சர்மா எக்ஸ் தளம்
T20

டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு.. விமர்சனத்திற்கு விளக்கமளித்த பிசிசிஐ!

”ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் ஓய்வை அறிவித்தது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு” என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Prakash J

2024 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா, அதன் பிறகு அப்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக அறிவித்தார். தவிர, அத்தகைய போட்டிகளுக்கு கேப்டனாகவும் இருந்தார். இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய ஆகிய அணிகளுக்கு எதிராக அவரது ஆட்டம் பெரிய அளவில் மெச்சும்படி இல்லை. தவிர, அவரது தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தொடரை இழந்ததும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்ததும் வரலாற்றுச் சாதனையாகப் பதிவானது. இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் முன்னேற முடியாமல் போனது. இதனால், ரோகித் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதையடுத்தே, 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடரில், 4வது போட்டியில் ஆடும் லெவனில் பங்கேற்காமல் இருந்தார்.

ரோகித் சர்மா

இந்த நிலையில், இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தச் சூழலில் பிசிசிஐ தேர்வுக் குழுவினர், ரோகித் சர்மாவை டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறச் சொன்னதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்தது. எனினும், ரோகித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியை அறிவிக்கும் பொருட்டு ரோகித் சர்மாவுக்கு சமீபகாலமாக பிசிசிஐ கடும் அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ஆயினும், ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவருடைய ஓய்வு குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். சிலர், பிசிசிஐ சாடி வருகின்றனர்.

ராஜிவ் சுக்லா

இந்த நிலையில், ”ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் ஓய்வை அறிவித்தது என்பது அவருடைய தனிப்பட்ட முடிவு” என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ.க்கு அளித்துள்ள பேட்டியில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு முடிவை பொறுத்தவரை, அவரது சொந்த முடிவை எடுத்துள்ளார். வீரரகள் ஓய்வு முடிவை எடுப்பதில், நாங்கள் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை அல்லது எந்த ஆலோசனையும் வழங்குவது அல்லது ஏதாவது சொல்வது கிடையாது. இது பிசிசிஐயின் கொள்கை. நாம் அவரை எவ்வளவு அதிகமாகப் புகழ்கிறோமோ, அது அவ்வளவு குறைவாகவே இருக்கும். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். நல்ல விஷயம் என்னவென்றால், அவர் இன்னும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை. எனவே அவரது அனுபவத்தையும் திறமையையும் நிச்சயமாகப் பயன்படுத்திக் கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.