டெஸ்ட் போட்டி| ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா! அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் மூன்று வகையான போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிறகு அப்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து விளையாடி வந்தார். அவருடைய தலைமையிலான அணி, கடந்த கால டெஸ்ட் போட்டிகளில் பெருத்த தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பார்டர் - கவாஸ்கர் தொடரை (4-1) இழந்தது. முன்னதாக, நியூசிலாந்துக்கு தொடரையும் (0-3) சொந்த மண்ணில் இழந்தது. 12 ஆண்டுகளில் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்தது அதுவே முதல் முறை ஆகும். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் முன்னேற முடியாமல் போனது.
இந்த நிலையில், இந்திய அணி, அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கிடையே, இந்தத் தொடருக்கான டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருந்தது. அகார்கர் தலைமையிலான தேர்வுக் குழு அவரை நீக்க முடிவு செய்திருந்தாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், தொடருக்கு முன்பாகவே டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். எனினும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாகத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், 11 வருட நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரோகித் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 12 சதங்கள் உட்பட மொத்தம் 4,301 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியே ரோகித்தின் கடைசி டெஸ்ட் ஆகும். இந்த தொடரின் கடைசிப் போட்டியில் ரோகித் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியில் அவரது தலைமையில் (24 போட்டிகள்), இந்தியா 12இல் வெற்றியும் 9இல் தோல்வியும் அடைந்தது.
மறுபுறம், அடுத்த டெஸ்ட் கேப்டனாக யார் இருப்பார் எனக் கேள்விகள் எழுந்துள்ளன. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணை கேப்டனாக இருப்பதால் அவர்தான் சிறந்த தேர்வாக இருக்க முடியும், ஆனால் அவரது உடற்தகுதி மற்றும் பணிச்சுமை மேலாண்மை ஒரு பிரச்னையாக மாறக்கூடும் என்பதாலும், அனைத்துப் போட்டிகளுக்கும் தயாராக இருக்கும் ஒரு கேப்டனையே இந்தியா விரும்புவதாலும் அவரை முழுநேர கேப்டனாக நியமிப்பது சிறந்த தேர்வாக இருக்காது என பிசிசிஐ கருதுகிறது. இதனால் அடுத்தகட்ட தேர்வாக கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷுப்மான் கில் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இந்த மூவரில், ராகுல் மட்டுமே டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வழிநடத்திய அனுபவம் கொண்டவர் என்பதால் அவர் பரிந்துரைக்கப்படலாம் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.