Sehwag indian Team Coach Indian Cricket Team
விளையாட்டு

இந்திய பயிற்சியாளராக சேவாக்? அவர் விதித்த ஒரே கண்டிஷன் இதுதான்: இறுதியில் நடந்தது என்ன?

இந்திய அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு தனக்கு வந்தது குறித்த விவரங்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பகிர்ந்துள்ளார்.

Praveen Joshva L

அணில் கும்ப்ளே-விராட் கோலி மோதலுக்குப் பின் புதிய இந்திய பயிற்சியாளரைத் தேடிய பிசிசிஐ, கோலி பரிந்துரையால் சேவாக்கை அணுகியது. ஆனால் சேவாக், முழு பயிற்சி குழுவையும் தானே அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தார். பிசிசிஐ அதற்கு ஒப்புக்கொள்ளாததால் அவர் பதவியை ஏற்கவில்லை. பின்னர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகில் அதிகம் சம்பளம் வழங்கப்படும் பதவியாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி கருதப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு பயிற்சியாளராக உலகின் முன்னணி வீரர்கள் போட்டி போடுவது வழக்கமாக உள்ளது.

அப்படி ஒரு வாய்ப்பு இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான சேவாக்குக்கு வந்துள்ளது என்ற தகவல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இது குறித்த தகவலை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சேவாக் வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் இருந்தே அவருக்கும் விராட் கோலிக்கும் இடையே மோதல் எழுந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக அவரின் பதவியை நீட்டிக்க பிசிசிஐ-யும் விரும்பாத நிலையே இருந்தது.

இந்த சூழலில் விராட் கோலியிடம் அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்து பிசிசிஐ விவாதித்துள்ளது. அப்போது அவர் சேவாக்கை பரிந்துரை செய்ததாகவும், அதன் அடிப்படையில் அப்போதைய பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி தன்னை இந்திய அணியின் பயிற்சியாளராக்க அணுகியதாகவும் சேவாக் கூறியுள்ளார்.

மேலும், தான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றால், அணியின் உதவி பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் பயிற்சியாளர்கள், பிசியோ மற்றும் உடற்பயிற்சியாளர் என எனது உதவியாளர்கள் அனைவரையும் நானே தேர்வு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தேன் என்றும், ஆனால், இதற்கு பிசிசிஐ சம்மதிக்காததால் நான் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்றும் சேவாக் கூறியுள்ளார். சேவாக் அந்த பதவியை ஏற்காத நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.