2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும்25 தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில், 182 வீரர்கள் தேர்வு செய்யபப்ட்டன. அந்த வகையில், பெங்களூரு அணியும் சில வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால், பெங்களூரு அணி, அடுத்தமுறையாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் RCBயின் சமூக ஊடகக் கணக்கு ஒன்று இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. இது, ’Royal Challengers Bengaluru Hindi’ என்ற கணக்கில், ’@RCBinHindi’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் உருவாக்கப்பட்ட இந்தக் கணக்கில் இதுவரை 2,500 பேர் பின்தொடர்கிறார்கள்.
இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் RCB வாங்கிய புதிய வீரர்களின் AI வீடியோக்கள் தற்போது சமூக ஊடக கணக்கில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஒரு வீடியோவில் விராட் கோலி, “ஆர்சிபியில் உள்ள அனைவருக்கும், ரசிகர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் வணக்கம். அடுத்த ஆண்டு தொடங்கும் ஐபிஎல் தொடரின் மூன்றாண்டு சுழற்சிக்காக நான் மீண்டும் ஒருமுறை தக்கவைக்கப்பட்டுள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த செய்தியைத் தெரிவிக்கிறேன். மேலும் நான் எப்போதும் போல் உற்சாகமாக இருக்கிறேன். நான் RCB க்காக விளையாட தொடங்கி 20 வருடங்கள் நெருங்கப் போகிறது. அதுவே மிக மிக விசேஷமானது. … RCB உடன் நான் பகிர்ந்து கொள்ளும் பிணைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது, RCB ஐத் தவிர வேறு எங்கும் நான் என்னைப் பார்க்கவில்லை. அதனால், நடந்த சம்பவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வலுவான அணியை உருவாக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது… மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறையாவது ஐபிஎல் கோப்பையைக் கொண்டுவருவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இது, இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கன்னட ரசிகர்களிடமிருந்து எதிர்வினைகளை ஆற்றத் தொடங்கியுள்ளது. கணக்கை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
’இது பெங்களூருவின் கன்னட கலாசாரத்தைச் சீர்குலைக்கிறது’ என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதுடன், இந்தி திணிப்பை ஊக்குவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், ‘இந்தி மொழியில் கணக்கு இருப்பதைப்போல பிற மொழிகளிலும் கொண்டு வருவீர்களா’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இன்னொரு பயனரோ, ‘இதேபோன்று டெல்லி அணி கன்னடத்தைக் கொண்டுவருமா’ எனக் கேட்டுள்ளார். இன்னொருவரோ, ‘இந்தி மொழியைப் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது. இதற்காக வெட்கப்படுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். இன்னும் சிலரோ, ‘ஆர்சிபியை வடஇந்தியாவிற்கு செல்லுமாறும், RCBயில் இருக்கும் பெங்களூருவை நீக்க வேண்டும் எனவும், கன்னடமும் ஆங்கிலமும் இருக்கும்போது இந்தி கணக்கு ஏன் தேவை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இணையத்தில் இந்த விவாதம் பயங்கர மோதலைத் தூண்டியுள்ள நிலையில், சில பயனர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பயனர் ஒருவர், ”ஆர்சிபி அணிக்கான இந்தி பக்கம் வடஇந்திய ஆர்சிபி ஆதரவாளர்களைச் சென்றடைய மிகவும் அவசியம். சிலர் இது இந்தி திணிப்பு என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஆர்சிபி கர்நாடகாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது” எனப் பதிவிட்டுள்ளார். மேலும் சிலர், ‘ஆர்சிபிக்கு உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதை வடஇந்தியாவிலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விவாகாரத்திற்கு ஆர்சிபி எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. முன்னதாக, ஆர்சிபி அணிக்கு, கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக ஊடகக் கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், இந்தி பேசுபவர்கள் பெங்களூருவில் மொழி தொடர்பாகப் பாதிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளனர். ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் கன்னடத்தில் பேச வேண்டும் என்று வலியுறுத்துவதாக பல சமூக ஊடக இடுகைகள் கூறுகின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பெங்களூரு சிவில் அமைப்பு அனைத்து கடைக்காரர்களையும் சைன்போர்டுகளில் குறைந்தது 60 சதவீத கன்னட உள்ளடக்கம் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டது. பல கடைகள் கன்னட ஆதரவாளர்களால் குறிவைக்கப்பட்டன. இது சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தைத் தூண்டியது குறிப்பிடத்தக்கது.