இந்தி திணிப்பு இல்லை.. படிங்க என்று ஆலோசனைதான் சொல்கிறோம்: வெங்கய்ய நாயுடு
இந்தியை திணிப்பதில் அரசு நம்பிக்கை கொள்ளவில்லை. உங்கள் மொழியுடன் சேர்த்து வேறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் மாநில மொழி செய்திப் பிரிவுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கு தகவல்களை கொண்டு சேர்க்க அவர்களது தாய்மொழியில் தொடர்பு கொள்வது அவசியம் என கூறினார். எந்த மொழியையும், யார் மீதும் திணிக்கும் பேச்சுக்கே இடமில்லை என கூறிய அவர், தாய்மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றார். மக்கள் மீது ஒரு மொழி திணிக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சிலர் தேவையில்லாமல் முயற்சிக்கிறார்கள். சிலர் இந்தியை திணிக்கவே கூடாது என கூறுகின்றனர். எதையும் திணிப்பதில் அரசு நம்பிக்கை கொள்ளவில்லை. உங்கள் மொழியுடன் சேர்ந்து வேறு ஒரு மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் என ஆலோசனை மட்டுமே கூறுகிறோம். ஆலோசனை கூறுவது வேறு, திணிப்பது வேறு என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.