Daniel Gudjohnsen and messi FIFA 2026 Worldcup Warmup match
விளையாட்டு

நீங்கள் என் அப்பாவின் TEAM MATE.. கைகொடுத்த எதிரணி வீரர்.. வைரலாகும் மெஸ்ஸியின் Reaction!

தனது இளம் வயதில் தன்னோடு ஆடிய சக வீரரின் மகனோடும் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் ஆடியது தலைமுறைகளை தாண்டிய அவரின் கால்பந்து திறனுக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

Praveen Joshva L

2006 முதல் 5 உலகக்கோப்பைகளில் விளையாடி 2022ல் கோப்பை வென்ற மெஸ்ஸி, 2026 உலகக்கோப்பைக்கு முன் ஐஸ்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கோல் அடித்து 3-0 என வெற்றி பெற்றார். போட்டிக்குப் பிறகு ஐஸ்லாந்து வீரர் டேனியல் குட்ஜான்சென், “என் அப்பா உங்களுடன் விளையாடியவர்” என அறிமுகமானபோது, அதிர்ச்சி கலந்த புன்னகையுடன் மெஸ்ஸி உரையாடிய வீடியோ வைரலாகிறது.

அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் வீரரான மெஸ்ஸி தனது 6-வது உலகக்கோப்பை தொடரில் ஆடவுள்ளார். முதல்முறையாக 2006-ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற FIFA கால்பந்து உலகக்கோப்பையில் பங்கேற்றார். தொடர்ந்து 2010, 2014, 2018, 2022 ஆகிய உலகக்கோப்பையில் அவர் ஆடிய நிலையில், 2022 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார்.

மெஸ்ஸி

தொடர்ந்து தற்போது 2026 உலகக்கோப்பையில் அவர் பங்கேற்கவுள்ளார். இந்த உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், அர்ஜென்டினா அணி தனது இறுதி பயிற்சி ஆட்டத்தில் ஐஸ்லாந்து அணியை சந்தித்தது.

Daniel Gudjohnsen & messi

இந்த போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் அடிக்க அர்ஜென்டினா அணி 3க்கு பூஜ்யம் என்ற கணக்கில் வெற்றிபெற்றது. தொடர்ந்து போட்டி முடிவடைந்ததும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக்கொண்டனர். அப்போது ஐஸ்லாந்து வீரர் டேனியல் குட்ஜான்சென் (Daniel Gudjohnsen) என்பவர் மெஸ்ஸியிடம் கைகொடுத்து, எனது தந்தை உங்களோடு கால்பந்து ஆடியவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

அப்போது மெஸ்ஸி கொடுத்த ரியாக்க்ஷன் தனது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தொடர்ந்து அவருடன் சில நிமிடங்கள் பேசிய மெஸ்ஸி புன்னகையுடன் விடைபெற்றார். மெஸ்ஸியுடன் பேசிய டேனியல் குட்ஜான்செனின் தந்தை எய்தூர் குட்ஜான்சென் (Eidur Gudjohnsen) ஐஸ்லாந்து உருவாக்கிய மிக சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.

Eidur Gudjohnsen & messi

இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு பார்சிலோனா கிளப்பில் இணைந்து மெஸ்ஸியுடன் இணைந்து 3 ஆண்டுகள் ஆடினார். இவர் மெஸ்ஸியோடு ஆடிய காலகட்டத்தில் அதாவது 2009-ம் ஆண்டு பார்சிலோனா ஒரே ஆண்டில் மூன்று முக்கியக் கோப்பைகள் வென்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் மெஸ்ஸி சிறுவனாக இருந்தபோது ஆடிய சக வீரர் ஒருவரின் மகன், தற்போது வளர்ந்து சர்வதேச அளவில் ஆடிவரும் நிலையில், அவருக்கு எதிராகவும் மெஸ்ஸி சர்வதேச போட்டியில் ஆடியுள்ளது தலைமுறைகளை தாண்டியும் மெஸ்ஸியின் ஆதிக்கம் தொடர்வதையே காட்டுவதாக பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.