இன்று தொடங்குகிறது கால்பந்து உலகக்கோப்பை.. 3 ஜாம்பவான்களுக்கு இறுதி வாய்ப்பு! ரூ.476 கோடி பரிசு!
ஜூன் 11 முதல் கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா இணைந்து நடத்தும் 2026 FIFA உலகக்கோப்பை 48 அணிகளுடன் துவங்குகிறது. இத்தாலி தகுதி இழந்த அதிர்ச்சி நடுவே உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகள் முதல்முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளன. 39 நாட்கள் நீளும் தொடரில் 1248 வீரர்கள் பங்கேற்க, சாம்பியன் அணிக்கு ரூ.476 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்படும் மிகப்பெரும் விளையாட்டுத் தொடரான FIFA கால்பந்து உலகக்கோப்பை ஜூன் 11-ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு உலககோப்பையை முதல்முறையாக கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
அதேபோல இதற்கு முன்னர் வரை உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கால்பந்து உலகக்கோப்பைக்கு 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி அணி தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம் உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் போன்ற அணிகளும், பலருக்குப் பெயரே தெரியாத கேப் வெர்டே, குராசோ போன்ற அணிகளும் முதல்முறையாக இந்த முறை கால்பந்து உலககோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளன.
3 ஜாம்பவான்களுக்கு கடைசி உலகக்கோப்பை!
இந்த தொடர், கால்பந்து உலகையே கட்டியாண்ட 3 ஜாம்பவான் வீரர்களுக்கு இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக உலகத்தின் இரு பெரும் துருவமாக இருக்கும் 38 வயதான அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி, 41 வயதான போர்ச்சுக்கல் அணியின் ரொனால்டோ மற்றும் 2 பேருக்கு நிகராக உருவெடுத்த பிரேசில் அணியின் நெய்மர் ஆகிய 3 பேருக்கும் இதுவே இறுதிக்கோப்பை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இதில் கடந்த 2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன்மூலம் மெஸ்ஸி, தனது நீண்டநாள் ஏக்கமான உலகக்கோப்பையை வென்று தனது கால்பந்து வாழ்க்கையை முழுமையாகியுள்ளார். மறுபக்கம், அனைத்து முக்கியக் கோப்பைகளையும் வென்ற ரொனால்டோவுக்கு இதுவரை வெல்லாத ஒரே முக்கியக் கோப்பையாக உலகக்கோப்பை திகழ்கிறது. இதனால் அவருக்கு அந்தக் கோப்பையை வெல்லும் ஒரே வாய்ப்பாக இந்த தொடர் இருப்பதால் அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் தொடர் காயத்தால் தன்னுடைய ஃபார்மை இழந்திருக்கும் நெய்மருக்கு இந்த உலகக்கோப்பையில் இடம்கிடைக்குமா, இடம்கிடைத்தாலும் அவரால் முதல் கோப்பையை ருசிக்க முடியுமா என்ற பெரிய கேள்வியும் எழுந்துள்ளது.
கோப்பை வென்றால் ரூ.476 கோடி பரிசு!
39 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த உலகக்கோப்பையில் 9 ஆசிய அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தமாக 1248 வீரர்கள் விளையாடவிருக்கும் சூழலில் இதில் 357 மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர், மீதமுள்ள 891 பேர் முதல்முறையாக உலகக்கோப்பையில் கலக்க உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 32 அணிகள், தலா 4 அணிகளாக 8 குரூப்களாக பிரிக்கப்பட்டன. குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறின. ஆனால் இந்த முறை 48 அணிகள் பங்கேற்பதால், அவை தலா 4 அணிகளாக மொத்தம் 12 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளும் (24), 3-ஆம் இடத்தைப் பிடிக்கும் சிறந்த அணிகளும் (8) நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, அதில் ரவுண்ட் ஆஃப் 32 என்ற புதிய சுற்று சேர்க்கப்பட்டுள்ளது.
போட்டியின் காலிறுதி, அரையிறுதி ஆட்டம் மற்றும் இறுதி ஆட்டம் என அனைத்தும் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் விளையாடப்படவுள்ளன. இந்த மைதானம் மொத்தம் 82,500 பேர் அமரும் இடவசதி கொண்டதாகும்.
உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ.476 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. போட்டி மொத்தத்துக்குமான பரிசுத் தொகையாக, ரூ.6,236 கோடியை ஃபிஃபா ஒதுக்கீடு செய்துள்ளது. டிராபியின் மதிப்பு மட்டும் 191 கோடியாகும்.

