சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான 14-வது சீசன் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி இன்று, மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் ஹாக்கி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, 2-ஆம் இடத்தில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. பி-பிரிவில் இந்திய அணி ஓமன், சுவிட்சர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
மதுரை ஹாக்கி மைதானத்தில், இன்று நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான முதல் லீக் போட்டியானது நடப்பு சாம்பியன் ஜெர்மனி - தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. இப்போட்டியினை, இந்திய ஹாக்கி பொதுச்செயலாளர் போலோநாத் சிங் மற்றும் அமைச்சர் மூர்த்தி, மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகியோர் இரு அணி வீரர்களுக்கும் கை குலுக்கி போட்டியை தொடங்கிவைத்தனர்.
இதில், 4 கால் சுற்றுகளாக நடைபெற்ற முதல் லீக் போட்டியில் முதல் கால் சுற்றில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, 4 புள்ளிகளுடன் (கோல்களுடன்) தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில், 2 பீல்ட் கோல்களும், ஒரு பெனாலிட்டி கார்னர் மற்றும் ஒரு பெனாலிட்டி ஸ்ட்ரோக் என்ற முறையில் 2 கோல்கள் என 4 கோல்கள் அடித்தனர். தொடர்ந்து, இப்போட்டில் தென் ஆப்ரிக்க அணி புள்ளிகள் இன்றி தோல்வியடைந்தது. முதல் லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி 2 கோல்களை அடித்த ஜெர்மனி அணி வீரர் வார்பெக் ஜஸ்டஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இவருக்கு அமைச்சர் மூர்த்தி ஆட்ட நாயகன் விருதை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து காலை 11.15 அயர்லாந்து - கனடா இடையே நடந்த 2-ஆவது லீக் போட்டியில், கனடா அணியை 4-3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியினை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
தொடர்ந்து, மதியம் 1.30 மணிக்கு ஸ்பெயின் - எகிப்து ஆகிய அணிக்கு இடையேயான போட்டி தொடங்கி நடந்து வரும் நிலையில், மதியம் 3.45 பெல்ஜியம் - நமிபியா அணிகளுக்கான லீக் போட்டிளும் நடைபெறவுள்ளது. முன்னதாக, உலகக் கோப்பை ஹாக்கி தொடர் முதன் முறையாக இந்தியாவில் மதுரை மற்றும் சென்னை என இரு ஹாக்கி மைதானங்களில் நடைபெறுகின்றன. சென்னையில் 41, மதுரையில் 31 என மொத்தம் 72 போட்டிகள் நடைபெறவுள்ளது. மதுரை ரேஸ்கோர்ஸ் புதிய ஹாக்கி மைதானத்தில் புதிய செயற்கை டர்ப், ரசிகர்கள் அமர்வதற்கு புதிய மேற்கூரை, இரவு நேரப் போட்டிகளுக்காக நவீன விளக்குகள், வீரர்களுக்கான அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சொந்தமண்ணில் களமிறங்கும் இந்திய அணியினர், சிறப்பாக செயல்பட்டு, 9 ஆண்டுக்குப் பின் கோப்பை வெற்றிபெறும் என இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கி போட்டியின் உலகக் கோப்பை லீக் போட்டிகளை காண ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும், இந்திய ஹாக்கி ரசிகர்கள் மற்றும் மதுரையை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் போட்டியை கண்டு மகிழ்ந்துவருகின்றனர்.