நேபாளம் | ரூபாய் நோட்டில் இந்தியப் பகுதிகள்... விவாதத்திற்கு உள்ளாகும் எல்லைப் பிரச்சனை!
நேபாளம் வெளியிட்ட புதிய 100 ரூபாய் நோட்டில் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டதால், இரு நாடுகளுக்கிடையேயான எல்லை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அசோக தூண், லும்பினி பற்றிய குறிப்பு, திருத்தப்பட்ட வரைபடம் ஆகியவை நோட்டில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,850 கி.மீ.க்கும் அதிகமான மிக நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த, 2020 ஆம் ஆண்டு அப்போதைய நேபாள பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு இந்திய எல்லைக்குட்பட்ட காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகளை இணைத்து திருத்தப்பட்ட புதிய நேபாள வரைபடம் ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதற்கு, இந்தியா தரப்பிலிருந்ததும் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான் மீண்டும் எல்லைப்பிரச்சனை பேசுபொருளாகியிருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட Gen Z போராட்டத்தால், அப்போதைய, பிரதமர் கே.பி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதையடுத்து, தற்போது இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக சுஷிலா கார்க்கி உள்ளார்.
இந்நிலையில் தான், நேபாள ரிசர்வ் வங்கி நேற்று புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டது. அதில், காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய திருத்தப்பட்ட நேபாள வரைபடம் அந்நோட்டில் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்நோட்டில், வரைபடத்தின் அருகே அசோக தூண் அச்சிடப்பட்டுள்ளது. அதனுடன் "லும்பினி, பகவான் புத்தரின் பிறப்பிடம்" என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.
நேபாள அரசு மீண்டும் இந்தியப் பகுதிகளை உரிமைகோரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா மற்றும் நேபாள எல்லைப்பிரச்சனை விவாதத்திற்கு வந்துள்ளது.

