கொல்கத்தா கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக, பிரேசில் தேசிய அணி இந்தியா வர வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் 25, 29ஆம் தேதிகளில் நட்பு போட்டிகள் முடிந்ததும், மூன்றாவது போட்டியை கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடத்த பிரேசில் கூட்டமைப்பு பரிசீலிக்கிறது. இறுதி முடிவு வந்தால், தலைமுறை கனவு நனவாகும்.
இந்தியாவில் அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டிருக்கும் இடமாக கொல்கத்தா அறியப்படுகிறது. நடப்பு கால்பந்து உலகக்கோப்பை தொடரின்போது கொல்கத்தாவின் தெருக்கள் முழுவதும் பிரேசில் உள்ளிட்ட கால்பந்து வீரர்களின் கட் அவுட்டும், சுவர்களில் வரையப்பட்ட வீரர்கள் படமும், ஜெர்சிகளால் நிறைந்த ரசிகர்களின் கொண்டாட்டமும் மிரளவைத்தன.
குறிப்பிட்டு சொல்லும் வகையில் கொல்கத்தாவில் பிரேசிலுக்கு கிடைத்த வரவேற்பானது பிரேசில் கால்பந்து கட்டமைப்பை பெரிதும் கவர்ந்துள்ளது. உலகத் தொடரின் போது, நகரின் பெரும் பகுதிகள் பிரேசில் ஜெர்சி நிறமான மஞ்சள் மற்றும் பச்சை வண்ணக் கடலாக மாறின. வடக்கு கொல்கத்தா முழுவதும் நெய்மர் மற்றும் வினிசியஸ் ஜூனியரின் சுவரோவியங்கள் தோன்றின. இவை இணையத்தை பெரிதும் ஆக்கிரமித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நட்பு போட்டியை விளையாடவிருக்கும் பிரேசில் அடுத்த போட்டியை இந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இஎஸ்பிஎன் பிரேசில் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வில் மற்றும் பிரிஸ்பேனில் 25ஆம் தேதி, 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் 2 நட்பு போட்டிகளுக்கு பிறகு 3வது போட்டியை அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் நடத்த பிரேசில் கால்பந்து கூட்டமைப்பு பரீசிலித்து வருகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதி முடிவில் இருப்பதாகவும், இது உறுதிசெய்யப்பட்டால் கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் போட்டி நடைபெறும் என்றும் தெரிகிறது. பிரேசிலை எதிர்கொள்ளும் மற்றொரு அணி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த நட்புப் போட்டி இறுதி செய்யப்பட்டால், தலைமுறை தலைமுறையாக பிரேசில் அணியைத் தொலைவிலிருந்து கொண்டாடி வரும் கொல்கத்தா நகரம், உலகக் கால்பந்தின் மிகவும் புகழ்பெற்ற தேசிய அணிகளில் ஒன்றான பிரேசில் அணியை அருகிலிருந்து பார்த்து கொண்டாடும் வாய்ப்பை பெறும்.
புதிய "சூப்பர் FIFA விண்டோ" முறையின் படி, தேசிய அணிகளின் போட்டி ஆட்டங்கள் மற்றும் நட்புப் போட்டிகள் உட்பட நான்கு போட்டிகள் வரை வெளியில் விளையாடுவதற்கு 16 நாட்கள் வரை அவகாசம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.