ஓய்வு பெற்ற கால்பந்து அசுரன்.. நெய்மார் ஜாம்பவானது எப்படி? வாழ்வை மாற்றிய ஒரு தவறான முடிவு!!
கால்பந்து உலகின் ஆகச் சிறந்த விருதாக கருதப்படும் பாலன் டி ஓர் விருதை 2008-ம் ஆண்டு ரொனால்டோ வெல்ல, அடுத்த ஆண்டு மெஸ்ஸி வென்றார். இதனால் கல்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான் என உலகமே கருதிய நிலையில், 2010-ம் ஆண்டு பிரேசிலின் சாண்டோஸ் கிளப் அணிக்காக பல மாயாஜாலங்கள் செய்த 18 வயது சிறுவன் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டார்.
2010-ம் ஆண்டு பாலன் டி ஓர் விருதை மெஸ்ஸி இரண்டாம் முறையாக வெல்ல, பாலன் டி ஓர் விருது பட்டியலில் 10-ம் இடம்பிடித்து அந்த சிறுவன் அசத்தினார். பொதுவாக பாலன் டி ஓர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் கூட ஐரோப்பிய கிளப் அணிகளுக்காக ஆடும் வீரர்கள்தான் இடம்பெறுவார்கள். ஆனால் பிரேசிலின் சாண்டோஸ் கிளப் அணிக்காக ஆடிய நெய்மார் என்ற அந்த சிறுவன் தனது திறமையால் உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்து, பாலன் டி ஓர் விருது பட்டியலில் 10-ம் இடம்பிடித்தது உலகத்தையே அதிர வைத்தார்.
தொடர்ந்து அவர் பல மாயாஜாலங்கள் செய்ய 2013-ம் ஆண்டு மெஸ்ஸி ஆடிய பார்சிலோனா அணி 430 கோடி கொடுத்து நெய்மாரை தங்கள் அணிக்கு ஆட வைத்தது. நெய்மாரின் வருகைக்குப் பிறகு பார்சிலோனா அணியில் லியோனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸ் மற்றும் நெய்மார் அடங்கிய அசுரத்தனமான முன்களம் உருவானது. MSN கூட்டணி என அழைக்கப்பட்ட இந்த தாக்குதல் கூட்டணி உலகின் அனைத்து காலகட்டத்தின் சிறந்த தாக்குதல் கூட்டணிகளில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.
இந்த கூட்டணி 2014-15 சீசனில் லா லிகா, கோபா டெல் ரே மற்றும் சாம்பியன்ஸ் லீக் ஆகிய மூன்றையும் வென்று "டிரெபிள்" (Treble) சாதனை படைத்தது. மேலும் மூன்று ஆண்டுகளில் இந்த கூட்டணி பார்சிலோனா அணிக்கு மொத்தம் 9 முக்கிய கோப்பைகளை வென்று தந்ததோடு, 3 ஆண்டுகளில் இவர்கள் மூவரும் இணைந்து 364 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தனர்.
பார்சிலோனா அணியில் மெஸ்ஸிக்கு இணையாக நெய்மாரின் வேகம், ட்ரிப்ளிங் மற்றும் கோல் அடிக்கும் திறன் ஆகியவை நெய்மாருக்கு உலகளவில் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. இந்த சூழலில் பிரான்சின் புகழ்பெற்ற PSG அணி 1,680 கோடி கொடுத்து நெய்மாரை வாங்க முன்வந்தது.
பார்சிலோனா அணியில் நெய்மார் எத்தனை சாதனை படைத்து இருந்தாலும், மெஸ்ஸியின் நிழலில் இருந்து அவர் வெளியேற விரும்பியதால் 2017-ம் ஆண்டு PSG அணிக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். நெய்மார் அவர் வாழ்வில் செய்த மாபெரும் தவறுகளில் ஒன்றாக இதை கால்பந்து விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.
PSG அணியில் நெய்மார் சிறப்பாக செயல்பட்டாலும் பிரான்ஸ் கால்பந்துக்கே உரிய முரட்டு ஆட்டத்தால் நெய்மார் அடிக்கடி காயமடைந்தார். இவர் அவரின் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் ஃபார்மும் குறைந்துகொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் அவர் ஐரோப்பாவில் இருந்து வெளியேற சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கிளப்பில் இணைந்தார். அனால், அங்கும் அவரின் காயம் தொடர்ந்ததால் அல் ஹிலால் அணிக்காக இரண்டு ஆண்டில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே நெய்மார் பங்குபெற்றார். இதன் காரணமாக 2025-ம் ஆண்டு, தான் கால்பந்தை முதலில் தொடங்கிய பிரேசிலின் சாண்டோஸ் கிளப்பில் இணைந்த அவர் அங்கு தொடர்ந்து ஆடி வருகிறார்.
கிளப் கால்பந்து ஒருபக்கம் என்றாலும் பிரேசில் தேசிய அணியின் நட்சத்திரமாக நெய்மார் தொடர்ந்து அசத்தி வந்தார். 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பையில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரராக நெய்மார் சிறப்பாக செயல்பட்டார்.
அந்த உலகக்கோப்பையில் அவர் 5 போட்டிகளில் 4 கோல்கள் அடித்து நெய்மார் அசுர பார்மில் இருந்த நிலையில், காலிறுதி போட்டியில் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். அவர் இல்லாத பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மனி அணிக்கு எதிரான போட்டியில் 7- 1 என வரலாற்றில் மோசமான தோல்வியை பதிவு செய்தது.
தொடர்ந்து 2018 உலகக்கோப்பை தொடருக்கு முன் அவர் மீண்டும் காயமடைந்தாலும், உலகக்கோப்பையில் பிரேசில் அணிக்காக களமிறங்கினார். அந்த தொடரில் அவர் முழு உடல்தகுதியோடு இல்லாத நிலையிலும், 2 கோல்களை அடித்து, 2 பேர் கோல் அடிக்க பங்களிப்பும் வழங்கினார். எனினும் அந்த உலகக்கோப்பையில் பிரேசில் அணி பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் 2க்கு 1 என தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
அதே போல 2022 உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியிலும் நெய்மார் காயமடைந்து இரண்டு போட்டிகளை தவிர விட்டார். தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் அவர் களமிறங்கி ஒரு கோல் அடித்த நிலையில், காலிறுதி போட்டியில் அவர் அடித்த கோல் இன்றும் உலகக்கோப்பையில் சிறந்த கோல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. எனினும் அந்த காலிறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் குரோஷியா அணிக்கு எதிரியாக தோல்வியை தழுவி வெளியேறியது.
தற்போது 2026 உலகக்கோப்பையில் காயம் காரணமாக நெய்மார் மாற்று வீரராகவே களமிறங்கினார். நார்வே அணிக்கு எதிரான போட்டியிலும் மாற்று வீரராக வந்து கடைசி நிமிடங்களில் பிரேசில் அணிக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நெய்மார் கோலாக மாற்றினார். எனினும் பிரேசில் அணி 2க்கு 1 என தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தோல்வியைத் தொடர்ந்து 34 வயதான நெய்மார் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதது உலகையே உலுக்கியுள்ளது. பின்னர் போட்டி முடிந்த பின் நான் கடுமையாக முயன்றேன், முயன்றேன்.. ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறி, சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகம் உருவாக்கிய மிக சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான நெய்மார் காயங்களால் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால், பல பாலன் டி ஆர் விருதுகளையும், உலககோப்பைகளையும் வென்று உலகின் மகத்தான வீரர்களில் ஒருவராக உருவாகியிருப்பார் என்பது மட்டும் உண்மை.

