Football legend Ronaldinho Ronaldinho Return to Football
விளையாட்டு

ரொனால்டினோ Return| 46 வயதில் மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்.. அவரின் புதிய அணி இதுதான்!

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ தனது 46-வது வயதில் மீண்டும் கால்பந்து களத்துக்கு திரும்பியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோ, 2015ல் ஓய்வு பெற்ற பிறகு 46 வயதில் மீண்டும் கால்பந்து களத்துக்கு திரும்புகிறார். 2002 உலகக்கோப்பை, பலோன் டி ஆர், இரண்டு முறை ஃபிஃபா உலக சிறந்த வீரர் விருதுகள் என பல சாதனைகள் படைத்த அவர், இத்தாலி மூன்றாம் தர நிலை கிளப் ரேவென்னா எஃப்சியுடன் ஒப்பந்தம் செய்து சில போட்டிகளில் களமிறங்க உள்ளார்.

மெஸ்ஸி - ரொனால்டோவோவுக்கு முன்னர் கால்பந்தை கட்டி ஆண்டவர் என்றால் அது பிரேசில் அணியின் ஜாம்பவான் ரொனால்டினோதான். 2005-ஆம் ஆண்டில் உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரருக்கான 'பலோன் டி ஆர்' (Ballon D Or) விருதை வென்றதோடு, 2004 மற்றும் 2005 எனத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 'ஃபிஃபாவின் ஆண்டின் சிறந்த உலக வீரர்' (FIFA World Player of the Year) விருதையும் வென்றார்.

இவர் இடம்பெற்றிருந்த பிரேசில் அணி 2002-ம் ஆண்டு உலககோப்பையையும் வென்றது. மைதானத்தில் ரொனால்டினோவின் மாயாஜாலம் ரசிகர்களுக்கு எப்போதுமே பெரிய அளவில் கொண்டாட்டத்தை கொடுத்து வந்தது. இதன் காரணமாக எதிரணி ரசிகர்களால் கூட மதிக்கப்பட்ட வீரராக அவர் வலம் வந்தார்.

PSG, பார்சிலோனா, AC மிலன் போன்ற மிகப்பெரிய கிளப் அணிகளுக்காக பல்வேறு கோப்பைகளை வென்ற ரொனால்டினோ கடந்த 2015-ம் ஆண்டு தனது 35 வயதில் அனைத்து விதமான கால்பந்து போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில், தற்போது 46 வயதான நிலையில் ரொனால்டினோ மீண்டும் கால்பந்து களத்துக்கு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இத்தாலியின் மூன்றாம் தர நிலை அணியான 'ரேவென்னா எஃப்சி' (Ravenna FC) என்ற கிளப் அணியுடன் ரொனால்டினோ அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

ரேவென்னா கிளப்பில் ஒரு அதிகாரப்பூர்வ வீரராக ரொனால்டினோவின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சில போட்டிகளிலும் அந்த அணிக்காக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.