ஐபிஎல் 2026 தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடாததற்கு தனிப்பட்ட காரணம் என கூறிய நிர்வாகத்தின் விளக்கத்தை யஷ் தயாள் மறுத்துள்ளார். ஆர்சிபி தான் தன்னை விளையாட்டிலிருந்து விலக்கி வைத்ததாக கூறும் அவர், டிவியில் போட்டிகளைப் பார்ப்பது மனதளவில் கடினமாக இருந்ததாகவும், அணியுடன் இருக்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்றாக உள்ளது. இவ்வணியில் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளும் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில், அவர் மீது இரண்டு பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று, ஜெய்ப்பூரில் உள்ள சங்கனர் காவல் நிலையத்தில் POCSO சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, யாஷ் தயாள் விசாரணையை எதிர்கொண்ட நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் அவரால் விளையாடமுடியாமல் போனது.
ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களில் யஷ் தயாளும் ஒருவராக இருந்தபோதும், 2026 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் அவர் பங்கேற்கவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக ஆர்சிபி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது விளையாடவில்லை என்ற முடிவை தான் எடுக்கவில்லை என்றும், அது ஆர்சிபி நிர்வாகமே எடுத்ததாக யஷ் தயாள் மாற்றி கூறியுள்ளார்.
டாக் வித் மன்வேந்திரா' பாட்காஸ்டில் பேசிய 28 வயதான தயாள், ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலகி இருக்கும் முடிவை அதிகாரிகளே எடுத்தார்களே தவிர, தனிப்பட்ட முறையில் தன்னால் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும், வீட்டிலிருந்து ஆர்சிபி போட்டிகளைப் பார்ப்பது மனதளவில் சவாலாக இருந்ததாகவும், அணியுடன் இருப்பதை விரும்பியதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், "நான் ஆர்சிபி போட்டியை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, சில சமயங்களில் என்னை மறந்து நான் எழுந்துவிடுவேன். அது என்னுடைய அணி, அவர்கள் என்னை நீக்கவில்லை. அவர்கள் என்னை தக்கவைப்புப் பட்டியலில் வைத்திருந்தார்கள், எனக்குப் பதிலாக வேறு யாரையும் நியமிக்கவில்லை. நான் ஒரு முக்கியமான அங்கம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்" என்று தயால் கூறினார்.
மேலும், “மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த சீசனில் இருந்து நான் விலகியது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. இந்த அறிக்கை சர்ச்சைக்குரியதாக இருக்கலாம், ஆனால் முடிவு எப்போதும் அதிகாரிகளால்தான் எடுக்கப்படுகிறது. ஆர்சிபியின் முடிவின் பின்னணியில் என்ன காரணம் இருந்தது என்று எனக்குத் தெரியாது. நான் அவர்களை மிகவும் மிஸ் செய்கிறேன். அணி என்னை மிஸ் செய்கிறதா என்று எனக்குத் தெரியாது, ரசிகர்கள் அதைச் சொல்வார்கள்” என்று தயாள் மேலும் கூறினார்.