பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் ரோகித் சர்மா ஏன் பங்கேற்கவில்லை?
புதுதில்லியில் மே 25 2026,அன்று நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோகித் சர்மா பங்கேற்காதது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் நான்காவது உயரிய குடிமக்கள் விருதான பத்மஸ்ரீ பெறுபவர்களின் பட்டியலில் அவரது பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததால், அவர் விழாவில் கலந்து கொள்வார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்திய கிரிக்கெட்டிற்கான அவரது பங்களிப்பு, தலைமைத்துவ சாதனைகள் மற்றும் சர்வதேச அளவிலான வெற்றிகளை பாராட்டி, இந்திய அரசு ரோகித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்தது. நிர்வாக மற்றும் அட்டவணை காரணங்களால் ரோகித் சர்மா முதல் கட்ட விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது வழங்கும் விழாவில் ரோகித் சர்மா பங்கேற்க்காத காரணம் என்ன?
குடியரசு தினத்தையொட்டி ஜனவரியில் பத்மஸ்ரீ விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டபோது ரோகித் சர்மாவின் பெயர் முக்கியமாக இடம்பெற்றிருந்தது. பத்மஸ்ரீ விருதை அறிவிக்கப்பட்டபோது, இந்திய அரசுக்கும் ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து ரோகித் சர்மா வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது விருது வழங்கும் விழாவில் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. எனினும், இது எந்தவித சர்ச்சையும் அல்ல; முழுக்க முழுக்க நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் காரணமாகவே ஏற்பட்டதாக தெரிகிறது. பொதுவாக பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் பல கட்டங்களாக நடைபெறுவது வழக்கம். விருது பெறுபவர்களின் அட்டவணை மற்றும் அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் அவர்கள் வெவ்வேறு நாட்களில் கௌரவிக்கப்படுவர்.
ரோகித் சர்மா பத்மஸ்ரீ விருதை எப்போது பெறுவார்?
முதல் கட்ட விழாவில் பங்கேற்க முடியாதவர்களுக்கு பின்னர் நடைபெறும் இரண்டாம் கட்ட நிகழ்ச்சிகளில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். ரோகித் சர்மா இந்த ஆண்டின் பின்னர் ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் மற்றொரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பத்மஸ்ரீ விருதைப் பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
