deepti sharma, alisa healy x page
கிரிக்கெட்

WPL Auction | ரூ.3.2 கோடிக்கு ஏலம் போன தீப்தி சர்மா.. விலை போகாத ஆஸி. கேப்டன்! - முழுவிபரம்

மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா அதிகபட்சமாக ரூ.3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

Prakash J

மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா அதிகபட்சமாக ரூ.3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் இடையிலான 4-ஆவது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி பிப்ரவரியில் நிறைவடைய இருக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த ஏலப்பட்டியலில் 194 இந்தியர்கள், 83 வெளிநாட்டவர்கள் என மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து 23 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட 73 பேர் அணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். ஒரு அணியில் குறைந்தது 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகள் இருக்கலாம்.

deepti sharma

இன்று நடைபெற்ற மெகா ஏலத்தில் இதுவரை அதிக விலைக்கு வாங்கப்பட்டவர் இந்திய ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா, UP வாரியர்ஸ் அணியால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டார். ஸ்பின்னர்களான ஸ்ரீ சரணி மற்றும் ஆஷா சோபனா ஆகியோர் டெல்லி கேபிடல்ஸ் (DC) மற்றும் UPW அணிகளுக்கு முறையே ரூ.1.3 கோடி மற்றும் ரூ.1.1 கோடிக்கு விற்கப்பட்டனர். வெளிநாட்டு வீராங்கனைகளில், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் அமெலியா கெர் மும்பை இந்தியன்ஸ் (MI)அணியால், ரூ.3 கோடிக்கு மீண்டும் வாங்கப்பட்டுள்ளார். மற்றொரு நியூசிலாந்து வீராங்கனை சோஃபி டெவின் குஜராத் அணியால் ரூ.2 கோடிக்கும், மெக் லானிங் உபி அணியால் ரூ.1.9 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் ரூ.1.1 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளரான எக்லெஸ்டோனை, ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் கேட்டபோதும், உபி வாரியர்ஸ் அணி வெறும் ரூ.85 லட்சத்திற்கு RTM மூலம் தக்கவைத்தது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் ரூ.60 லட்சத்திற்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தங்கள் ஒரே ரைட்-டு-மேட்ச் (RTM) கார்டைப் பயன்படுத்தி, இதுவரை விளையாடாத ஆல்ரவுண்டர் பிரேமா ராவத்தை ரூ.20 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது. ஆரம்பத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியால் அவர் வாங்கப்பட்டிருந்தார்.

அலிசா ஹீலி

அதேபோல், மும்பை இந்தியன்ஸ் அணியும் சமஸ்கிருதி குப்தாவை ரூ.20 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியுள்ளது. அதுபோல், இதுவரை விளையாடாத வீராங்கனைகளில் தியா யாதவ் மட்டுமே விற்கப்பட்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியால் அவரது அடிப்படை விலையான ரூ.10 லட்சத்திற்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தின் மிகப்பெரிய அதிர்ச்சியாக, ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், அதிரடி தொடக்க வீராங்கனையுமான அலிசா ஹீலி எந்த அணியாலும் வாங்கப்படாமல் அன்சோல்டு ஆனார். அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்குக்கூட அவரை வாங்க யாரும் முன்வராதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.