சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் pt web
கிரிக்கெட்

ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி.. இடம்பெறுவாரா கில்? எகிறும் எதிர்பார்ப்பும்.. விவாதமும்..!

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி வரும் செவ்வாய்கிழமை அறிவிக்கப்படவுள்ளது. பல வீரர்களின் இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Sports Desk

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்நிலையில், இந்திய அணியின் வீரர்கள் தேர்வு தொடர்பான விவாதம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சூர்யகுமார் யாதவ்

ஆசியக் கோப்பைக்கான அணியில், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா போன்ற வீரர்கள் நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தோன்றினாலும், சில வீரர்களின் தேர்வு சந்தேகமாகவே இருக்கிறது. அந்த வரிசையில், டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லின் இடம் குறித்து கேள்வியெழுந்துள்ளது. இந்தியா விளையாடிய கடைசி இரண்டு டி20 தொடர்களில் பிசிசிஐ அவரைத் தேர்வு செய்யவில்லை. சர்வதேச தரநிலையில் முதலிடத்தில் இருந்தும் கில்லை எந்த வரிசையில் களமிறக்குவது என்ற கேள்வி இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

மிகமுக்கியமாக ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் கடைசியாக 2024 ஆம் ஆண்டுதான் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கின்றனர். அதன்பிறகு தொடக்க ஆட்டக்காரர்களாக சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் உருவானார்கள். எனவே, ரிசர்வ் இடத்திற்கு ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், மற்ற இருவடிவங்களிலும் மிக முக்கியமான வீரராக திகழும் கில்லை, டி20க்கான தொடக்க ஆட்டக்காரர்களில் மூன்றாவது வீரராகத் தேர்வு செய்வது சரியான செயல் அல்ல என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். கில் 21 டி20 போட்டிகளில் விளையாடி 578 ரன்கள் எடுத்துள்ளார், அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் 23 ஆட்டங்களில் 723 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கில்

அப்படியே கில்லை அணியில் தேர்ந்தெடுத்து ப்ளேயிங் 11ல் இடம்பெற வைத்தால் சஞ்சு சாம்சனை மிடில் ஆர்டரில் ஆட வைக்க வேண்டும். அது சரியாக வேலை செய்யாது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார். ஏனெனில், மூன்று மற்றும் நான்காம் இடங்களில் திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவும் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்ய குமார் , திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற முன்னணி வீரர்கள் ஏற்கனவே அணியில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால், அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங்கின் இடம்பெறுவது குறித்தும் சந்தேகம் நிலவுகிறது. ஐபிஎல்-லில் அடுத்தடுத்து ஐந்து சிக்ஸர்கள் அடித்து ஒரு காலத்தில் இந்திய அணியின் நம்பகமான ஃபினிஷராக உருவெடுத்த ரிங்கு சிங், தற்போது ஃபார்மில் இல்லை என தேர்வுக்குழு கருதுகிறது.

rinku - rohit

ஏனெனில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை.. stand by வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2024 ஐபிஎல் தொடரில் அவர் மொத்தமாகவே 113 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். 2025ல் 134 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார்.. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்தானே என்று நினைத்தாலும், எதிர்கொண்ட பந்துகளுக்கு ஏற்ற வகையில் ரன்களை அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், 2025ல் அவர் 206 ரன்களை எடுத்திருந்த நிலையில், ஸ்ட்ரைக் ரேட் 153 ஆகவே இருக்கிறது. 2024ல் 168 ரன்களை மட்டுமே எடுத்திருக்கும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 148 ஆக இருக்கிறது. எனவே, அவரது க்ராப் சரிவைக் கண்டிப்பது கண்கூடாகத் தெரிகிறது.

பும்ரா அணியில் தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பணிச்சுமை காரணமாக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில், தற்போது தேர்வு செய்யப்படுவதற்கான முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியின் ஸ்லாட்களில் ஒவ்வொரு இடத்திற்கும் தற்போது போட்டி அதிகரித்திருக்கிறது. எனவே, அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சில அதிரடி முடிவுகளை எடுக்கக்கூடும் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.