1983க்கு பின் 28 ஆண்டுகள் கழித்து 2011ல் இந்தியா உலகக்கோப்பை வென்ற வரலாறு, சச்சினுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வெற்றி, ரசிகர்களின் மகிழ்ச்சி ஆகியவை சொல்லப்படுகின்றன. அதே நேரத்தில், ரோகித் சர்மா ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதை ஸ்ரீகாந்த் விளக்கி, ஆல்ரவுண்டர்கள் மீது வைத்த நம்பிக்கையே அந்த இளம் வீரரின் கனவை நொறுக்கியது என வருத்தத்துடன் கூறுகிறார்.
1983 உலகக்கோப்பை வென்றதற்கு பிறகு கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக இந்தியா உலகக்கோப்பை வெல்லாமல் இருந்தது. கிட்டத்தட்ட 2011 உலகக்கோப்பை தான் சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பையாக இருந்திருக்கும், இந்திய கிரிக்கெட்டிற்காக அனைத்தையும் செய்த சச்சினிடம் ஒரு உலகக்கோப்பை கூட அதுவரை இல்லை என்பது பெரிய குறையாக சொல்லப்பட்டது.
ஒருவேளை கோப்பையே இல்லாமல் சச்சின் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துவிடுவாரோ என்ற பயத்தில் இருந்த ரசிகர்களுக்கு, தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று 28 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாட்டத்தை கொண்டுவந்தது.
சொந்தமண்ணில் கோப்பை வெல்வது, அதிலும் ப்ரைம் ஸ்டேடியமான மும்பை வான்கடே மைதானத்தில் கோப்பை வெல்வது, சச்சின் டெண்டுல்கருக்கு அர்ப்பணித்தது என இந்திய அணியுடன் இந்திய ரசிகர்களும் கொண்டாட்டத்தின் உச்சியில் இருந்தனர். ஆனால் அந்த உலகக்கோப்பையில் விளையாட தகுதியிருந்தும் விளையாட முடியாமல் போனதற்காக ரோகித் சர்மா மட்டும் பெரிய காயத்தோடு உலவிகொண்டிருந்தார்.
2011 உலகக்கோப்பை வென்றதற்கு பிறகு பலமுறை அப்போது விளையாட முடியாமல் போனதற்கு தன்னுடைய ஆதங்கத்தை ரோகித் பொதுவெளியில் பகிருந்திருந்தார்.
இந்தநிலையில் 2011 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவை ஏன் எடுக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அப்போதைய பிசிசிஐயின் தலைமைத் தேர்வாளரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
தி வீக் உடனான நேர்காணலில் பேசியிருக்கும் அவர், “இன்றும் கூட ரோகித் சர்மாவிற்காக நான் வருந்துகிறேன். கடந்த ஆண்டு மன்னித்துவிடு நண்பா. அது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்று அவரிடம் மன்னிப்பு கோரினேன்.
அப்போது எங்களுடைய சிந்தனை 1983 உலகக் கோப்பையில் இருந்ததைப் போல நிறைய ஆல்ரவுண்டர்கள் அணியில் இருப்பதை விரும்பினோம். அதனால் தான் அதிகப்படியான பகுதிநேர ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்தோம். யுவராஜ், சேவாக், சச்சின் மற்றும் சுரேஷ் ரெய்னா என அனைவரும் உலகக்கோப்பையில் எங்களுக்காக பந்துவீசினார்கள். முடிவில் தொடரின் சிறந்த வீரராக (Player of the Tournament) யார் தேர்ந்தெடுக்கப்பட்டார்? பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறந்து விளங்கிய யுவராஜ் சிங் தான்.
துரதிர்ஷ்டவசமாக 'பகுதிநேர ஆல்ரவுண்டர்கள்’ எனும் கோட்பாட்டின் காரணமாகதான் பாவம் ரோகித் சர்மாவால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டது. உண்மையில், 2011 உலகக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேவையான தகுதி அவருக்கு முழுமையாகவே இருந்தது; ஆனால், அந்தப் பரிதாபத்திற்குரிய இளைஞனுக்கு அந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது" என தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்துள்ளார்.