5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை பெற்றிருக்கும் நிலையில், இந்திய அணி கட்டாயம் வெல்லவேண்டிய நிலையில் 4வது டெஸ்ட் போட்டியில் களம்கண்டு விளையாடி வருகிறது.
மான்செஸ்டரில் நடந்துவரும் 4வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா 358 ரன்கள் சேர்த்தது. அதற்குபிறகு விளையாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் 225/2 முடித்தது.
தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஜாக் கிராவ்லி இருவரும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டினர். இரண்டு ஓப்பனர்களும் வெளியேறிய பிறகு 3வது நாள் ஆட்டத்தை ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் இருவரும் தொடங்கினர்.
தொடக்கத்தில் ஸ்விங் கிடைத்தபோதும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதற்குபிறகு ஜடேஜாவை முயற்சித்த சுப்மன் கில் 69வது ஓவர் வரை வாசிங்டனை பயன்படுத்தவில்லை. அதற்குள் ஒல்லிபோப் அரைசதமும், ஜோ ரூட் 38வது டெஸ்ட் சதமும் அடித்து அசத்தினர்.
முடிவில் பந்துவீசவந்த வாஷிங்டன் சுந்தர் ஒல்லிப்போப்பை 71 ரன்னிலும், இன்ஃபார்மில் இருந்துவரும் ஹாரி ப்ரூக்கை 3 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினார்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு பவுலரை, ஏன் நீண்டநேரம் பந்துவீச அனுமதிக்கவில்லை என்ற விமர்சனத்தை கில்லை நோக்கி பல முன்னாள் வீரர்கள் எழுப்பியுள்ளனர்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இதை கில் கேப்டன்சியின் அச்சம் தரக்கூடிய ரெட் ஃபிளாக் என்று குறிப்பிட்டார். தினேஷ் கார்த்திக் பேசுகையில், எதற்காக அவர்கள் வாஷிங்டனை நீண்டநேரம் பயன்படுத்தவில்லை என்பது எனக்கு புரியவில்லை என்று குறிப்பிட்டார்.
முன்னாள் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர் பிராட், எல்லோரும் எங்கே வாஷிங்டன் சுந்தர் என்று கேட்கிறார்கள், பந்தை காற்றில் டிர்ஃப்ட் செய்யும் ஒரு ஸ்பின்னரை ஏன் அவர்கள் பயன்படுத்தவில்லை என்பது எனக்கும் புரியவில்லை என்று கூறினார்.
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசைன், இங்கிலாந்தில் காற்றின் வேகத்திற்கு ஈடாக இப்படி பந்தை அலையவிட்ட ஸ்பின்னரை நான் பார்த்ததில்லை என்று வாசிங்டனுக்கு புகழாரம் சூட்டினார்.
வாஷிங்டன் சுந்தர் ஏன் நீண்டநேரம் பந்துவீச வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், “சுப்மன் கில் சீமர்களுடன் சிறிது நேரம் நீட்டிக்க சொன்னார். வாஷி பந்துவீசியபோது சிறப்பாக செயல்பட்டார், ஆனால் ஸ்பின்னை விரைவில் கொண்டு வருவதற்கு நாங்கள் ஆரம்பத்தில் போதுமான நல்ல பந்துகளை வீசவில்லை” என கூறியுள்ளார்.
இன்று 4வது நாள் ஆட்டம் நடக்க உள்ள நிலையில, தற்போது 544/7 என்ற வலுவான நிலையில் இருக்கும் இங்கிலாந்து 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிருந்து இங்கிலாந்து 50 ரன்கள் அடித்தாலும், ரிஷப் பண்ட் ஆடுவாரா என்ற சந்தேகத்தில் இந்தியாவின் தோல்வி இன்றைய நாளே முடிவுசெய்யப்படும். இதிலிருந்து இந்தியா தப்பிக்க வேண்டுமானால் தொடக்க வீரர்களிடமிருந்து மிகப்பெரிய அதிரடி சதம் வரவேண்டும், அப்படி நடந்தால் மட்டுமே இந்தியா தோல்வியை தவிர்த்து போட்டியை சமன்செய்ய முடியும்.