பிரிட்டனின் Diageo குழுமத்திற்குச் சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது.
இதற்கிடையே, இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இந்த நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விற்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனின் Diageo குழுமத்திற்குச் சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நிறுவனம் கடைசி நிமிடத்தில் தனது மனதை மாற்றிக் கொள்ளலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இருப்பினும், நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஐபிஎல் அணியுடன் தொடர்வதில் அதிக மகிழ்ச்சியடையவில்லை என்ற கருத்துகள் உள்ளன. காரணம், இது நிறுவனத்தின் முக்கிய வணிகமாகப் பார்க்கப்படவில்லை என்ற கூற்றும் நிலவுகிறது.
அந்த வகையில், ஆர்சிபி அணியை வாங்க உள்நாட்டில் 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் 2 நிறுவங்களும் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டியாஜியோ நிர்வாகத்துடன் கோவிஷீல்டு தடுப்பூசி தயாரித்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், அதானி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பார்த் ஜிண்டால், டெல்லியைச் சேர்ந்த பலதுறை நலன்களைக் கொண்ட கோடீஸ்வரர் ஒருவரும் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலே குறிப்பிடப்பட்ட நான்கு நிறுவனங்களைத் தவிர, அமெரிக்காவை தளமாகக் கொண்ட இரண்டு தனியார் பங்கு நிறுவனங்களும் பரிசீலித்து வருகின்றன. மேலும், இந்த விற்பனை குறித்து ஆலோசனை வழங்குவதற்காக சிட்டி உட்பட இரண்டு தனியார் வங்கிகளை டியாஜியோ நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டியாஜியோவின் இந்தியப் பிரிவு இதற்கு சாதகமாக இல்லை என்று கூறப்படுவதால், பரிவர்த்தனை நடக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க அதன் அதிகாரிகள் சிலர் சமீபத்தில் இங்கிலாந்து சென்றிருந்தனர். இன்னொரு புறம், அணி விற்கப்படுமா என்பதை தீர்மானிக்கக்கூடிய மிகப்பெரிய காரணி மதிப்பீட்டைப் பொறுத்தது ஆகும். டியாஜியோ 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை மேற்கோள் காட்டுவதால், ஒரு ஐபிஎல் உரிமையாளருக்கு அவ்வளவு விலை கொடுக்க முடியுமா என்பது குறித்து வெவ்வேறு கருத்துகள் உள்ளன. மேலும், RCB உடனான பிரச்னை வெறும் மதிப்பீட்டைப் பற்றியது மட்டுமல்ல. ஜூன் 4 சோக வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது. இது, புதிதாக வாங்குபவருக்குச் சிக்கல்களை உண்டாக்கலாம் எனக் கூறப்படுகிறது. தவிர, பெங்களூரு நகரத்தில் மைதானம் குறித்தும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.