ரசிகர்கள் உயிரிழப்பு.. உருக்கமான அறிக்கையுடன் நிதியுதவியை உயர்த்திய RCB!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட சோகத்தில், RCB அணியின் நிர்வாகம் 84 நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்து, உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும், 'RCB Cares' என்ற திட்டத்தின் தொடக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உயிரிழப்பு
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் 4 மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஓய்வு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு கடந்த மாதம் 7ஆம் தேதி அரசு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அவரது தலைமையிலான குழுவினர், சமீபத்தில் அந்த விசாரணை அறிக்கையை முதல்வர் சித்தராமையாவிடம் அளித்தனர்.
ஆர்.சி.பி. மீது குற்றஞ்சாட்டிய கர்நாடக அரசு
மறுபுறம், கர்நாடக உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கியது. மேலும், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தது தொடர்பான குறித்த நிலை அறிக்கையை வெளியிடுமாறு கர்நாடகா உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, நிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ”போலீஸாரைக் கலந்தாலோசிக்காமல் பொதுமக்களை RCB அழைத்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, இந்த துயரச் சம்பவத்திற்குக் காரணமான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு கர்நாடக அரசு ஆர்சிபி மீது குற்றம்சாட்டியது. இருப்பினும், சின்னசாமி மைதானத்தின் தன்மை குறித்த கவலைகளும் கேள்விக்குறியாகின.
இந்த நிலையில், கூட்ட நெரிசல்... ரசிகர்கள் உயிரிழப்பு தொடர்பாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் 84 நாட்களுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி மவுனம் கலைத்தது. பெங்களூரு ஐபிஎல் கொண்டாட்ட உயிரிழப்புகளுக்கு பிறகு RCB அணியின் சமூக தள கணக்குகளில் எந்த பதிவையும் பகிராத நிலையில், கடந்த 28ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில், ’ஜூன் 4ஆம் தேதி நிகழ்வு நம் இதயங்களை உடைத்துவிட்டது என்றும் நீண்ட அமைதியால் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு துணை நிற்கவும் ஆறுதல் கூறுவதும் கவுரவப்படுத்துவதுமே தங்கள் நோக்கம்’ என அதில் கூறப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து அடுத்த பதிவை வெளியிட்டுள்ளது. அதில், உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த அணி நிர்வாகம் உயிரிழந்த குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் தருவதாகத் தெரிவித்திருந்தது. தற்போது இந்தத் தொகையை மேலும் உயர்த்தி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள பதிவில், "ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு பேரை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களில் ஒரு பகுதியாக இருந்தனர். எங்கள் நகரம், எங்கள் சமூகம் மற்றும் எங்கள் அணியை தனித்துவமாக்குவதில் ஒரு பகுதி. அவர்கள் இல்லாதது எங்கள் ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும். அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எந்தளவாலும் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும், மிகுந்த மரியாதையுடனும், ஆர்சிபி அவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது” என அதில் தெரிவித்துள்ளது.
மேலும், ’RCB Cares’ என்ற பெயரில் அவர்களின் நிதியின் தொடக்கத்தையும் RCB உறுதிப்படுத்தியுள்ளது. "இது RCB CARESஇன் தொடக்கமும் கூட. அவர்களின் நினைவைப் போற்றுவதன் மூலம் தொடங்கும் அர்த்தமுள்ள செயலுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு. ஒவ்வொரு அடியும் ரசிகர்கள் என்ன உணர்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள் மற்றும் தகுதியானவர்கள் என்பதைப் பிரதிபலிக்கும். RCB CARES பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில்" என்று RCB தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.