2026 ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து பல்வேறு தளங்களில் விவாதம் நடைபெறுகிறது. ஆல்ரவுண்டர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. குறிப்பாக கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டன், மதிஷா பதிரானா போன்றோர் அதிக விலைக்கு விற்கப்படலாம்.
அபுதாபியில் நாளை 2026 ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அதிக தொகைக்கு யார் விற்பனை செய்யப்படுவார்கள் என பல்வேறு தளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
மினி ஏலத்தை பொறுத்தவரை பொதுவாகவே ஆல்ரவுண்டர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவார்கள். அதேபோல பார்த்தால் அனைத்து அணிகளுக்கும் போட்டிகளை நல்ல முறையில் பினிஷ் செய்யக்கூடிய ஆல்ரவுண்டர் மற்றும் ஹிட்டர்கள் தேவைப்படுகின்றனர். அதனால் எந்தெந்த வீரர்கள் அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்..
ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், இங்கிலாந்து அணியின் லியாம் லிவிங்ஸ்டன், இந்தியாவின் வெங்கடேஷ் ஐயர், மேற்கிந்திய தீவை சேர்ந்த ஜேசன் ஹோல்டர், நியூசிலாந்து அணியின் பிரேஸ்வெல் ஆகியோர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை இலங்கை அணியின் மதிஷா பத்திரானா, நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி மற்றும் ஜேமிசன், தென் ஆப்ரிக்கா அணியின் ஆண்ட்ரிச் நார்கியா மற்றும் பங்களாதேஷ் அணியின் முஷ்தஃபிசூர் ரகுமான் ஆகியோர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு பின் அதிக அளவில் ரன்கள் குவிக்கப்படுகிறது. போட்டியின் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுத்தால் மட்டுமே அணிகள் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதனால் அணிகளில் நல்ல சுழற்பந்து வீச்சாளர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்தாலும் சப்ளை குறைவாகவே உள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் மிக சிறப்பாக அமையவில்லை என்றாலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி பிஷ்னாய், ராகுல் சாஹர் மற்றும் இலங்கை அணியின் ஹசரங்கா ஆகியோர் நல்ல தொகைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
விக்கெட் கீப்பர் பொறுத்தவரை இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ, ஜேமி ஸ்மித் ஆகியோரும், தென்னாப்பிரிக்காவின் டிகாக், நியூசிலாந்து அணியின் டிம் சீஃபர்ட் ஆகியோர் நல்ல தொகைக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இவர்கள் இல்லாமல் நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஆஸ்திரேலியா அணியின் மேத்யூ ஷார்ட், கூப்பர் கானலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அகீல் ஹொசைன் ஆகியோரும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.
அன்கேப்டு வீரர்களை பொறுத்தவரையில் கார்திக் சர்மா, சன்னி சந்து, அக்யூப் நபி, பிரசாந்த் வீர், மேக்னீல் நோரோன்ஹா போன்ற வீரர்களும் நல்ல விலைக்கு செல்லவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.