கே.எல்.ராகுல், சாம்பியன்ஸ் டிராபி pt web
கிரிக்கெட்

மீண்டும் அழைக்கப்பட்ட ராகுல்... சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய கால அவகாசம் கேட்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Angeshwar G

சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை வரும் 12ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. அணியில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதை பிப்ரவரி 13 ஆம் தேதிக்குள் செய்துமுடித்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி தொடர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன் அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை ஐ.சி.சியிடம் வழங்க வேண்டும். ஆனால், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியை 5 வாரத்திற்கு முன்பே வழங்க வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு வெளியாக கால காலதாமதம் ஆகலாம் என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு வந்த ஜெய்ஷா தற்போது ஐசிசி செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில் புதிய பிசிசிஐ செயலாளர் வருகின்ற 12ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட இருக்கிறார். எனவே, இந்த அணியை அறிவிப்பு செய்ய கால அவகாசம் கேட்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி ஜனவரி 18 அல்லது 19 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், சாம்பியன்ஸ் ட்ராபிக்கான வீரர்கள் தேர்வில் பல முக்கிய திருப்பங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம் இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுமாறு கே எல் ராகுலிடம் பிசிசிஐ கேட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. முதலில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் கருத்தில் கொண்டு, பயிற்சிக்காக ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு மீண்டும் அழைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேசமயத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. டி20 தொடரைப் பொறுத்தவரை கடந்தமுறை வங்கதேசத்திற்கு எதிராக தேர்வு செய்யப்பட்ட அணியைப் போலவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.