தோனி web
கிரிக்கெட்

CSK அணியினருடன் லக்னோ பயணம்.. கடைசி நேரத்தில் ‘கட்’ செய்த தோனி.. தவிர்த்தது ஏன்?

நடப்புத் தொடரில் ஒரு போட்டியிலும் தோனி விளையாடாதது, அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Prakash J

நடப்பு ஐபிஎல் தொடரில், சென்னை அணி எஞ்சியுள்ள 3 போட்டிகளில் நாளை லக்னோவைச் சந்திக்க இருக்கிறது. இதற்காக, தோனிக்கும் விமான டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் அதை ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

2026 ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. பிளேஆப் சுற்றுக்காக ஒரு சில அணிகள் கடுமையான போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்றாக இருக்கிறது. தற்போதைய புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 5 இடத்தில் உள்ளது. அது தாம் விளையாடிய 11 போட்டிகளில் 6இல் வெற்றியும் 5இல் தோல்வியும் கண்டுள்ளது. இன்னும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் அவ்வணி வென்றால் உறுதியாக பிளே ஆப்புக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றை நினைத்தே பார்க்க முடியும்.

dhoni

அதேநேரத்தில், அவ்வணியின் வீரர்கள் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறி வருவதும் சென்னை அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேமி ஓவர்டன் வலது தொடையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி அவசரமாக சொந்த நாடு திரும்பியுள்ளார். இதற்கிடையே, நடப்புத் தொடரில் ஒரு போட்டியிலும் தோனி விளையாடாதது அவரது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தச் சூழலில், சென்னை அணி, நாளை லக்னோவில் லக்னோ அணியைச் சந்திக்கிறது. முக்கியமான இந்தப் போட்டியிலாவது தோனி களமிறங்குவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். லக்னோ செல்லும் பயணத்திற்காக தோனியின் விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக CSK-வின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியிருந்தார். இதனால், இந்தப் போட்டியில் அவர் களமிறங்குவார் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர். ஆனால், கடைசி நேரத்தில் தோனி லக்னோ செல்ல வேண்டாம் என முடிவு செய்து அணியுடன் பயணிக்க மறுத்துவிட்டார். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற சென்னை அணி தீவிரமாகப் போராடி வருகிறது.

MS Dhoni

இப்படியான சூழ்நிலையில் சென்னை அணி உள்ளது. மேலும், தற்போதைய ஆடும் லெவன் செட்டாகி விட்டதால், தொடரின் இந்த முக்கியமான கட்டத்தில் தான் உள்ளே நுழைந்து அணியின் சீரான போக்கைக் கலைக்க தோனி விரும்பவில்லை என சிஎஸ்கே நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அணியின் கவனத்தை திசைதிருப்பாமல் இருக்க அவர் மைதானத்திற்கு வருவதைக்கூட தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. தொடருக்கு முன்பாக, தோனியின் கால் தசைநாரில் காயம் ஏற்பட்டு, முதலில் 2 வாரங்களில் அவர் குணமடைந்து விடுவார் எனக் கூறப்பட்டாலும், அவரது காயம் மீண்டும் தீவிரமடைந்ததால் தோனி இன்னும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.