CSK-வுக்கு மேலும்மேலும் மரண அடி.. பிளே ஆப் நெருங்கும் வேளை.. வெளியேறிய முக்கிய வீரர்!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் வலது தொடையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி அவசரமாக சொந்த நாடு திரும்பியுள்ளார்.
2026 ஐபிஎல் தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. பிளேஆப் சுற்றுக்காக ஒரு சில அணிகள் கடுமையான போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்றாக இருக்கிறது. தற்போதைய புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 5 இடத்தில் உள்ளது. அது தாம் விளையாடிய 11 போட்டிகளில் 6இல் வெற்றியும் 5இல் தோல்வியும் கண்டுள்ளது. இன்னும் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் அவ்வணி வென்றால் உறுதியாக பிளே ஆப்புக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே நெட் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றை நினைத்தே பார்க்க முடியும். இந்த நிலையில், அவ்வணி மேலும் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் வலது தொடையில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி அவசரமாக சொந்த நாடு திரும்பியுள்ளார். தற்போது ஜேமி ஓவர்டனுக்கு லண்டனில் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற உள்ளதால், அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த சீசனில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய அவர், 14 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு பெரும் பலமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசன் முழுவதுமே சிஎஸ்கே அணியில் பல வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளனர். முன்னதாக கலீல் அகமது, ராமகிருஷ்ணா கோஷ், ஆயுஷ் மாத்ரே, நாதன் எல்லிஸ் ஆகியோர் காயத்தால் விலகிய நிலையில், பந்துவீச்சில் நம்பிக்கை அளித்து வந்த ஜேமி ஓவர்டனும் தற்போது விலகியுள்ளது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம், இந்த தொடரில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில்கூட விளையாடவில்லை. எனினும், இவற்றையெல்லாம் விஞ்சி, அவ்வணி நடப்புத் தொடரில் அடுத்தசுற்றுக்குச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

