வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணியின் வீரேந்தர் சேவாக் தனக்கு இணையான வீரர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் ஆக்ரோசமான மற்றும் அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் போனவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்.
121 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ரிச்சர்ட்ஸ் 50 சராசரியுடன் 8540 ரன்கள் குவித்துள்ளார். அதில் 24 சதங்களும், 45 அரைசதங்களும் அடங்கும். முதல்தர கிரிக்கெட்டில் 49 சராசரியுடன் 36ஆயிரம் ரன்களையும் குவித்துள்ளார் ரிச்சர்ட்ஸ்.
இன்றுவரை உள்ள கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவருக்கும் முன்னோடியாக இருந்துவரும் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்தர் சேவாக்கை தனக்கு இணையான வீரர் என்று புகழ்ந்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இந்திய அணிக்கு எதிராக முன் தயாரிப்பு இல்லாமல் களமிறங்கியிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி மோசமாக விளையாடிவருகிறது.
இந்தசூழலில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாரா இருவரும் நேரில் வந்து போட்டியை பார்த்தனர். அப்போது பேசிய விவியன் ரிச்சர்ட்ஸ் விரேந்தர் சேவாக்கை புகழ்ந்து பேசியுள்ளார்.
சேவாக் குறித்து பேசிய அவர், “விரேந்தர் சேவாக் எனக்கு இணையான வீரர், அழிந்து கொண்டிருந்த டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பித்து கொண்டுவந்தவர் சேவாக்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.