இந்திய கிரிக்கெட்டில் தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்திற்காக அறியப்படுபவர் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக். இவரைபோல ஒரு தொடக்கவீரர் இன்னும் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை என்ற கூற்றை பல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
இந்திய அணிக்காக 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை என இரண்டுமுறை உலகக்கோப்பை வென்றவரான சேவாக், 1999-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும், 2001-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அறிமுகத்தை பெற்றார்.
அங்கிருந்து 12 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய சேவாக், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 49.34 சராசரியுடன் 8586 ரன்கள் அடித்துள்ளார். அதில் 23 சதங்களும் 32 அரைசதங்களும் அடங்கும்.
251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8273 ரன்கள் குவித்திருக்கும் சேவாக், 15 சதங்களையும் 38 அரைசதங்களையும் விளாசினார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்திருக்கும் சேவாக், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்களை அடித்த ஒரே இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார். மேலும் 2010-ம் ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் உட்பட 1282 ரன்கள் குவித்த சேவாக் ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 17000 ரன்களை குவித்தவரான மூத்தவீரர் வீரேந்தர் சேவாக், ஒருநாள் கிரிக்கெட்டில் 6 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வுபெற நினைத்ததாக கசப்பான நாட்களை பகிர்ந்துகொண்டார்.
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் சேவாக், “2007-2008ஆம் ஆண்டு நாங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடரான காமன்வெல்த் பேங்க் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா 10 போட்டிகளில் விளையாடியது, அதில் நான் முதல் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடினேன். பின்னர் எம்.எஸ். தோனி என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டார். அதன் பிறகு சிறிது காலம் அணியில் நான் தேர்வு செய்யப்படவேயில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் இதற்கு பின்னரும் நான் விளையாடும் XI-ல் இடம்பெறாவிட்டால், ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று தோன்றியது. நான் ஓய்வுபெற்றுவிடலாம் என்ற எண்ணத்திற்கு சென்றேன்.
பிறகு நான் டெண்டுல்கரிடம் சென்று, 'ODI போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்து வருகிறேன்' என்று சொன்னேன். அவர், 'இல்லை அப்படி செய்யாதீர்கள், 1999-2000ஆம் ஆண்டுகளில் இதேபோன்ற ஒரு கட்டத்தை நானும் கடந்து வந்தேன், அப்போது நானும் கிரிக்கெட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அந்தநேரமும் கடந்து போனது. எனவே, ஒரு கடினமான கட்டத்தை கடந்துசெல்லவேண்டிய இடத்தில் நீங்கள் தற்போது இருக்கிறீர்கள், இதுவும் கடந்து போகும்.
நீங்கள் உணர்ச்சிவசப்படும்போது கோபத்தில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். உங்களுக்கு சிறிது நேரம் கொடுத்து 1-2 தொடர்களில் விளையாடுங்கள். அதற்கு பின்னர் ஒரு முடிவை எடுங்கள் என்று கூறினார்.
பின்னர் நான் அடுத்தடுத்த தொடர்களில் வாய்ப்பு கிடைத்தபோது ரன்களை குவித்தேன். பிறகு 2011 உலகக் கோப்பையை விளையாடினேன், நாங்கள் உலகக் கோப்பையையும் வென்றோம்" என்று பேசியுள்ளார்.
2007 காமன்வெல்த் பேங்க் தொடரில் ராபின் உத்தப்பாவையும், ரோகித் சர்மாவையும் தொடக்க வீரர்களாக பரிசோதித்தார் அப்போதைய கேப்டனான எம் எஸ் தோனி.