விராட் கோலி
விராட் கோலி ட்விட்டர்
கிரிக்கெட்

WC அரையிறுதியில் தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் அவுட்... வரலாற்றை மாற்றி புதிய சாதனையில் விராட் கோலி!

Prakash J

உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த ரோகித்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று (நவ.15) முதலாவது அரையிறுதிப் போட்டி நடக்கிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.

இதையடுத்து தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இன்னிங்ஸைத் தொடங்கினர். எப்போதும்போல அதிரடியில் கலக்கிய ரோகித் சர்மா, சிக்ஸர் மழை பொழிந்ததுடன், உலகக்கோப்பையில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களில் முதல் இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்தார். தவிர, நடப்பு உலகக்கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் ஒன்றிலும் அதிக சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதல் இடம் பிடித்தார்.

இதையும் படிக்க: தொடர்ந்து சிக்ஸர் மழை: உலகக்கோப்பையில் புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா!

வரலாற்றை மாற்றி எழுதிய விராட் கோலி

இன்றைய போட்டியில் ஒருசில சாதனைகள் படைத்த ரோகித் சர்மா, அடுத்த சிக்ஸர் அடிக்க முயன்றபோது அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு, சுப்மன் கில்லுடன் இணைந்த நட்சத்திர வீரர் விராட் கோலி பொறுமையாக விளையாடி வருகிறார். இன்றைய போட்டியில் அவர், 59 பந்துகளில் அரைசதம் எடுத்தார். இதன்மூலம் விராட் கோலி, வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார்.

ஆம், இதுவரை 4 உலகக்கோப்பை (2011, 2015, 2019. 2023) தொடர்களில் பங்கேற்றுள்ள விராட் கோலி, இதற்கு முன்பு நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தது குறித்து தற்போது அதிகம் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது, உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய அரையிறுதிப் போட்டிகளில் விராட் கோலி வெறும் ஒற்றை இலக்க ரன்களிலேயே ஆட்டமிழந்துள்ளார்.

உலகக்கோப்பையில் மேலும் சில சாதனைகள் படைத்த விராட்

இதுகுறித்து விராட் கோலியைப் பலரும் விமர்சித்து வந்தனர். அதாவது, “2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வெறும் 9 ரன்களிலும், 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதியில் 1 ரன்னிலும், 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1 ரன்னிலும் ஆட்டமிழந்துள்ளார். ஆக, 3 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் விராட் கோலி ஆட்டமிழந்திருக்கிறார். 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக எப்படி விளையாடப்போகிறாரோ’ என குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வந்தனர்.

இதற்கு இன்றைய போட்டியில் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், தம்முடைய பேட்டிங்கை மீண்டும் நிரூபித்துள்ளார். தவிர, இன்றைய போட்டியில் மேலும் ஒருசில சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 36 பேர் உயிரிழப்பு

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலுக்கு முன்னேறிய விராட்

இன்றைய போட்டியில் அவர் 27 ரன்கள் எடுத்ததன்மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (13,705) குவித்த வீரர்களின் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறினார். இந்தப் பட்டியலில் முன்னதாக 13,704 ரன்களுடன் 3வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்கைப் பின்னுக்குத் தள்ளினார். இந்தப் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதல் இடத்திலும், இலங்கை வீரர் குமார் சங்ககரா 14,234 ரன்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் இந்தப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலிலும் விராட் கோலி 3வது இடத்துக்கு முன்னேறினார்.

கோலி 217 அரைசதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் 264 அரைசதங்களுடன் முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் 217 அரைசதங்களுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.

மேலும், உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அதிக அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலிலும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக அரைசதம் வீரர்களின் பட்டியலும் விராட் கோலியே முதல் இடத்தில் உள்ளார். மொத்தம் 8 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் சச்சின் மற்றும் ஷாகிப் அல் ஹாசன் ஆகியோர் தலா 7 அரைசதங்களுடன் 2வது இடத்திலும் இந்திய கேப்டன் ரோகித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 6 அரைசதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

உலகக்கோப்பையில் சச்சின் சாதனையைத் தகர்த்த கோலி!

மேலும் இன்றைய போட்டியில் விராட் கோலி 78 ரன்கள் எடுத்ததன் மூலம் சச்சினின் இன்னொரு சாதனையையும் முறியடித்தார். உலகக்கோப்பை தொடர் ஒன்றில் சச்சின் அதிகபட்சமாய் 673 ரன்கள் எடுத்திருந்தார். அவர் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். அவருடைய இந்தச் சாதனையை விராட் கோலி இன்று தகர்த்துள்ளார்.

கோலி - சச்சின்

இன்றைய போட்டியில் அவர் 80 ரன்கள் எடுத்திருந்தபோது சச்சினின் சாதனையை தகர்த்தார். இதன்மூலம் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் அதிகபட்ச ரன் (674*) குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தைப் பிடித்தார்.

தவிர நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் அதிக ரன்குவிப்பில் கோலியே முதல் இடத்தில் உள்ளார். தம்முடைய சாதனையை இந்திய வீரர்களான விராட் அல்லது ரோகித் ஆகியோரே தகர்ப்பார்கள் என சச்சினே ஒருமுறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.