“அவர் தான் எப்போதும் என்னுடைய ஹீரோ”- சச்சின் குறித்து எமோஷனலாக பேசிய விராட் கோலி!
சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற இமாலய சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி 10 வருடங்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருந்தால், முடியவே முடியாது என்ற குரல்கள் தான் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த நம்பவே முடியாத உலக சாதனையை இந்தியாவின் மற்றொரு வீரரான விராட் கோலி, சமன் செய்து அசத்தியுள்ளார். சச்சினின் இந்த உலகசாதனையை முறியடிப்பதற்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே விராட் கோலிக்கு மீதம் உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 243 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது இந்திய அணி. முதலில் விளையாடிய இந்திய அணி, விராட் கோலியின் அபாரமான சதம் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் அற்புதமான அரைசதத்தின் உதவியால் 326 ரன்கள் குவித்தது. 327 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி, ஜடேஜா மற்றும் ஷமி இருவரின் அபாரமான பந்துவீச்சால் 83 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
49வது ஒருநாள் சதம்! கோலிக்கு வாழ்த்து சொன்ன சச்சின்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 49வது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவரான சச்சினின் உலகசாதனையை சமன்செய்தார். சச்சின் 452 போட்டிகளில் விளையாடி 49 ODI சதங்கள் அடித்திருந்த நிலையில், விராட் கோலி 277 போட்டிகளில் மட்டுமே விளையாடி 49 ஒடிஐ சதங்கள் என்ற இமாலய சாதனையை சமன்செய்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய உலக சாதனையை சமன்செய்த கோலிக்கு சச்சின் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். கோலி குறித்து பேசிய சச்சின், “சிறப்பாக விளையாடினீர்கள் விராட். 49-ல் இருந்து 50 ஆக (வயது) மாற எனக்கு இந்தவருடம் 365 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால் நீங்கள் அடுத்த சில நாட்களில் 50ஆவது சதத்தை விளாசி எனது ரெக்கார்டை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
அவர் தான் எப்போதும் என்னுடைய ஹீரோ! - கோலி
சச்சின் கோலிக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலியிடம் சச்சினின் வாழ்த்தை தெரிவித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது சச்சின் குறித்து எமோசனலாக பேசிய விராட் கோலி, “எனது ஹீரோ சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். என் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்று எனக்கு தெரியும். அவரை சிறுவயதில் டிவியில் பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அவர் பேட்டிங்கில் தலைசிறந்தவர். என்னால் அவரைப் போல எப்போதும் சிறந்தவராக இருக்க முடியாது. அவர்தான் எப்போதும் என் ஹீரோ” என விராட் கோலி பேசியுள்ளார்.