virat kohli bcci
கிரிக்கெட்

IND v SA | "எனக்கு முடிவே கிடையாது" 52வது சதம் விளாசிய விராட் கோலி.. விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம், கிரிக்கெட் உலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

Prakash J

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்ததன் மூலம், கிரிக்கெட் உலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இந்தியாவின் ‘ரன் மெஷின்’என அழைக்கப்படுபவர் விராட் கோலி. இவர், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், 2027 உலகக் கோப்பையைக் கருத்தில்கொண்டு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார். இதேபோல்தான் ரோகித் சர்மாவும். இவர்களுடைய அனுபவம் உலகக் கோப்பையில் கை கொடுக்கும் என நம்பப்படும் நிலையில், ஆனால் அவர்களுடைய எதிர்காலம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தவிர, தேர்வாளர்கள் மத்தியிலும் ஒருவித நீண்ட அலசலுக்குப் பிறகே முடிவு செய்யப்பட்டு அவர்கள் ஒருநாள் தொடரில் இடம்பெற்றனர். அதிலும் கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு ரோகித் சர்மா, உடல் எடையை வெகுவாகக் குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம்பெற்றனர்.

rohit sharma, virat kohli

அந்த தொடரில் ரோகித் ஃபார்ம்க்கு திரும்பிய நிலையில், முதல் இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக டக்களை சந்தித்தார் விராட் கோலி. ஆனால் சிட்னியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் எடுத்து தன்னுடைய மறுபிரவேசத்தை மீண்டும் தொடங்கினார். அதன்பலன், தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தென்னாப்பிரிக்கா தொடரிலும் இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று ராஞ்சியில் தொடங்கிய முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 3வது ஓவரிலேயே தொடக்க வீரர் யாஷஸ்வியின் விக்கெட்டை இழந்தது. எனினும், மற்றொரு தொடக்க பேட்டர் ரோகித் சர்மாவுடன் விராட் கோலியுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் நிதானத்தையும், அதேநேரத்தில் அவ்வப்போது வேகத்தையும் காட்டினர். குறிப்பாக, 2027 ஒருநாள் உலகக்கோப்பையை மனதில் வைத்து விளையாடும் இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியபடியே இருந்தனர்.

இதனால் இந்தியாவின் ரன்ரேட்டும் உயர்ந்தபடியே இருந்தது. அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா, 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகம் சிக்ஸர் (352) அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். ஏற்கெனவே பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அவருடைய சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

மறுபுறம், ஆரம்பம் முதலே அதிரடியில் ஈடுபட்ட விராட் கோலி, சதம் அடித்து தம்மீது இருந்த முழுமையான விமர்சனத்தைப் போக்கினார். கடந்த காலங்களில் மிடில் ஓவர்களில் வேகம் குறைவதற்காக அடிக்கடி விமர்சிக்கப்பட்ட கோலி, இந்த முறை அப்படி ஒரு தளர்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். மேலும், வழக்கமான பவுண்டரிகளுடன் ஸ்கோர்போர்டையும் உயர்த்தினார். அவர் ஒருநாள் போட்டிகளில் 52வது சதத்தைப் பதிவு செய்தார். இந்தப் பட்டியலில் அவரே முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளார். கிட்டத்தட்ட 43 ஓவர்கள் வரை களத்தில் நின்ற விராட் கோலி, 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதில் 11 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடக்கம். இதே மைதானத்தில்தான் அவர், தன்னுடைய 3வது சதத்தையும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சதம் அடித்த மகிழ்ச்சியில் உற்சாகமாய்த் துள்ளி எழுந்த விராட் கோலி, உரத்த கர்ஜனையுடன் கிரிக்கெட் உலகை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மறுபக்கம், கடைசி நேரத்தில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 60 ரன்களிலும், ஜடேஜா 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜேன்சன், பர்கர், போஸ்ச், பார்ட்மேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

350 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென்னாப்ரிக்க அணி விளையாடி வருகிறது. ஹர்சித் ரானா வீசிய இரண்டாவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்தன. தென்னாப்ரிக்க அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.