new zealand web
கிரிக்கெட்

’இந்த முறை நியூசிலாந்து கோப்பை வெல்லும்..’! சாம்பியன்ஸ் டிராபி குறித்து டிம் சவுத்தீ நம்பிக்கை!

எப்போதும் நியூசிலாந்து அணி ஐசிசி தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது, அணியில் தற்போது இருக்கும் பேலன்ஸ் இந்த அணியை கோப்பைக்கு அழைத்துச்செல்லும் என டிம் சவுத்தீ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

ஐசிசியின் அடுத்த மிகப்பெரிய கோப்பையாக பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது இந்தாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 09-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது.

ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி

இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கும் நிலையில், குரூப் ஏ-ல் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் முதலிய அணிகளும்குரூப் பி-ல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அனைத்து அணிகளும் மிகப்பெரிய மோதலுக்கு தயாராகவே இருக்கின்றன. தொடரின் முதல் போட்டியில் பிப்ரவரி 19ம் தேதி நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை கராச்சியில் எதிர்கொள்கிறது.

நியூசிலாந்து கோப்பை வெல்வதை பார்க்க விரும்புகிறேன்..

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி களம்கண்டுள்ளது. அணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் இளம் டேலண்ட் வீரர்கள் என்ற சிறந்த கலவையாக இருக்கிறது. பந்துவீச்சில் அனுபவம் இல்லையென்றாலும், 300 ரன்களுக்கு மேல் இலக்கு இருந்தாலும் துரத்தி எட்டுமளவு ஒரு வலுவான அணியை கொண்டுள்ளது நியூசிலாந்து.

new zealand

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான், தென்னாப்ரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ஒன்றில் கூட தோற்காத நியூசிலாந்து கோப்பையை தட்டிச்சென்றது அந்தணிக்கு மேலும் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

டிம் சௌத்தி

இந்நிலையில் ஐசிசி உடன் பேசியிருக்கும் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ, “நியூசிலாந்து அணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் திறமைவாய்ந்த இளம் வீரர்களால் சரிசமமான திறமைவாய்ந்த அணியாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரை வென்ற இளம்வீரர்களுக்கு மேலும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஐசிசி தொடர்களில் எப்போதும் பிளாக் கேப்ஸ் சிறப்பாகவே சென்றுள்ளது. தொடக்கத்தில் கான்வே, ரச்சின், மிடில் ஆர்டரில் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், லோயர் ஆர்டரில் பிலிப்ஸ் என அணி வலுவானதாக இருக்கிறது. அனைத்தும் சரியாக நடந்தால், இந்தமுறை பிளாக் கேப்ஸ் இறுதிப்போட்டிக்கு சென்று கோப்பை வெல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று டிம் சவுத்தீ கூறியுள்ளார்.