ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான்-சன்ரைசர்ஸ் மோதலில் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி 36 பந்தில் சதம் அடித்து 12 சிக்சர்களுடன் 103 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். அவரது வெடிகுண்டு இன்னிங்ஸால் 228 ரன்கள் என்ற பெரிய ஸ்கோர் வந்தாலும், பின் வரிசை பேட்ஸ்மேன்கள் டோட்டலை மேலும் உயர்த்த தவறினர்.
ஐபிஎல் தொடரின் 19வது சீசனானது கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 10 அணிகளும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திவரும் நிலையில், பெஸ்ட் vs பெஸ்ட் என பல அதிரடி போட்டிகளுடன் களைகட்டி வருகிறது 2026 ஐபிஎல்.
ஒருபக்கம் நடப்பு சாம்பியன் ஆர்சிபி, மறுபக்கம் ரன்னர்-அப் பஞ்சாப் கிங்ஸ், இன்னொரு பக்கம் சுட்டிக்குழந்தைகள் சூர்யவன்ஷி-ஜெய்ஸ்வால் கொண்ட ராஜஸ்தான் ராயலஸ் என 3 அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இஷான் கிஷன் தலைமையிலான SRH அணியும் முட்டிமோதிவருகிறது.
இந்தநிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தின. காயத்திலிருந்து மீண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் பாட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்பட்டார்.
ஜெய்ப்பூர் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 15 வயது வைபவ் சூர்யவன்ஷியின் 36 பந்தில் சதம் என்ற அபாரமான பேட்டிங்கால் 228 ரன்கள் குவித்தது. 12 சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யவன்ஷி 37 பந்தில்103 ரன்கள் அடித்தாலும், அவருக்கு பிறகு களமிறங்கிய மற்ற ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் 250 ரன்கள் செல்லவேண்டிய டோட்டலை 228ஆக சுருக்கினர்.
229 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் 29 பந்தில் 57 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அதற்குப்பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் மிடில் ஓவர்களை டாமினேட் செய்து 238 ஸ்ட்ரைக்ரேட்டில் 31 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தினார்.
அதற்குபிறகு வந்த நிதிஷ் குமார் ரெட்டி 3 சிக்சர்களுடன் 18 பந்தில் 36 ரன்கள் அடிக்க 18.3 ஓவரிலேயே 229 ரன்களை இலக்கை எட்டிய சன்ரைசர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது.
36 பந்தில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷி, அதிவேகமாக ஐபிஎல் சதமடித்த வீரர்கள் பட்டியலில் 30 பந்தில் சதமடித்த கிரிஸ் கெயிலுக்கு பிறகு, 2வது மற்றும் 3வது இடத்தில் 35, 36 பந்துகளில் அடித்து நீடிக்கிறார். இதன்மூலம் 40 பந்திற்குள் 2 சதங்கள் அடித்த முதல் உலக வீரராக சாதனை படைத்தார் சூர்யவன்ஷி.
மேலும் நேற்றைய போட்டியில் தனியாளாக 12 சிக்சர்கள் அடித்த சூர்யவன்ஷி, ஐபிஎல் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற அசத்தலான சாதனையை பதிவுசெய்தார். முதலிடத்தில் சிஎஸ்கேவிற்காக முரளி விஜய் அடித்த 11 சிக்சர்கள் சாதனை முறியடிக்கப்பட்டது.