‘கருண் நாயர் அல்ல.. DC-ன் தோல்விக்கு கேஎல் ராகுல் தான் காரணம்..’ முன்னாள் வீரர் சொன்ன காரணம்..?
ஐபிஎல் வரலாற்றில் மறக்க முடியாத பஞ்சாப் கிங்ஸ்–டெல்லி கேபிடல்ஸ் போட்டியில், 264 ரன்கள் குவித்தும் டெல்லி தோல்வியடைந்தது. இரண்டு எளிய கேட்ச்களை விட்ட கருண் நாயர் மீது குற்றம் சாட்டப்படும்போதும், கருண் நாயருக்கு ஆதரவளித்திருக்கும் முன்னாள் வீரர் டெல்லி கேபிடல்ஸின் தவறான முடிவை சாடினார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு போட்டியாக மாறியது. 264 ரன்கள் குவித்தபோதும் டெல்லி கேபிடல்ஸ் அணியால் வெற்றியை பெறமுடியவில்லை, மாறாக ஃபீல்டிங்கில் 2 எளிதான கேட்ச்களை கோட்டைவிட்ட அந்த அணி பஞ்சாப் கிங்ஸை ஒரு வரலாற்று வெற்றிக்கு அனுமதித்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள், 35 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த 2 எளிதான கேட்ச்களை கோட்டைவிட்டார் டெல்லி வீரர் கருண் நாயர். இதுதான் டெல்லி அணியின் வரலாற்று தோல்விக்கு வழிவகுத்தது.
இந்தசூழலில் தான் கருண் நாயர் மீது தவறே இல்லை என்றும், டெல்லி அணியின் தோல்விக்கு கேஎல் ராகுல் தான் ஒருவகையில் காரணம் என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
தன்னுடைய யூடியூப் சேனல் உரையாடலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “எல்லோரும் 2 கேட்ச்களை தவறவிட்டதற்காக தோல்விக்கு கருண் நாயர் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் 152 ரன்கள் அடித்தபிறகு கேஎல் ராகுலுக்கு மாற்றுவீரராக இன்னொரு விக்கெட் கீப்பரை எடுத்துவராமல் கருண் நாயரை ஃபீல்டிங் செய்ய வைத்தது டெல்லி அணி. பொதுவாக போட்டியில் கருண் நாயர் ஃபீல்டிங் செய்த இடத்தில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் தான் ஃபீல்டிங் செய்வார், அவர் சிறந்த ஃபீல்டர். ஆனால் அவரை விக்கெட் கீப்பிங் செய்ய வைத்துவிட்டு, பயிற்சியால் சோர்வடைந்திருந்த கருண் நாயரை டெல்லி அணி களமிறக்கியது. கேல் ராகுலுக்கு பதிலாக உங்களுடைய இளம் விக்கெட் கீப்பர் அபிஷேக் போரல் தான் மாற்றுவீரராக வந்திருக்க வேண்டும். போரல் ஃபீல்டிங்கிற்கு வந்திருந்தால் இந்த தவறு நடந்திருக்காது, கருண் நாயர் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த சிறந்த ஃபீல்டர். அதனால் கருண் நாயர் மீது நான் தவறே சொல்ல மாட்டேன்” என்று அஸ்வின் கூறியுள்ளார்.

