ஐபிஎல் 2026 இறுதிப்போட்டிக்கு இரண்டாவது இடம் பிடிக்க குஜராத்–ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், ஆரம்ப சிக்கல்களை மீறி ராஜஸ்தான் 20 ஓவரில் 214 ரன்கள் குவித்தது. 96 ரன்கள் அடித்து சதமடிக்க நெருங்கிய சூர்யவன்ஷி, 45 ரன்கள் சேர்த்த ஜடேஜா, இறுதியில் 11 பந்தில் 38 ரன்கள் பறக்கவிட்ட டானவன் ஆகியோரின் ஆட்டம் அணியை உயர்த்தியது. இப்போது GT 215 ரன்கள் வேட்டையில் இறுதிப்போட்டி நுழைவுக்காக போராடுகிறது; RCBக்கு அடுத்ததாக யார்? என்ற எதிர்பார்ப்பு கிளர்ந்துள்ளது.
2026 ஐபிஎல் கோப்பை யாருக்கு என்பதற்கான இறுதிப்போட்டிக்கான தேடல் நெருங்கியுள்ளது. முதல் அணியாக ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், 2வது அணியாக கால்தடம் பதிக்கவிருப்பது யார் என்ற போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
நியூ சண்டிகரில் தொடங்கப்பட்ட போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்தது. ஆனால் ஏன் பேட்டிங்கை தேர்வுசெய்தோம் என வருத்தப்படும் அளவு 9 ரன்னுக்கே 2 விக்கெட்டை கழற்றி டைட்டன்ஸ் அணி சிறப்பாக தொடங்கியது.
ஒருபக்கம் அணி தத்தளிக்க எப்போதும் அதிரடியாக விளையாடும் சூர்யவன்ஷி இந்தமுறை நிதானமாக நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு பக்கபலமாக முன்னதாக களமிறக்கப்பட்ட ஜடேஜா அடுத்தடுத்து சிக்சர் பவுண்டரிகளாக விரட்டி சூர்யவன்ஷி மீதிருந்த அழுத்தத்தை நீக்கினார். ஜடேஜாவும் சூர்யவன்ஷியும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க 6 ஓவரில் 70 ரன்கள் குவித்து அசத்தியது.
இறுதிவரை நிலைத்து நின்று ஆடிய சூர்யவன்ஷி 7 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் அடித்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜடேஜா 45 ரன்களும், கடைசியில் வந்து அதிரடி காட்டிய டானவன் 11 பந்தில் 4 சிக்சர்களுடன் 38 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 214 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் அணி.
215 ரன்கள் அடித்தால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் பேட்டிங் செய்து வருகிறது குஜராத் டைட்டன்ஸ் அணி.