Suryakumar Yadav
Suryakumar Yadav Cricinfo
கிரிக்கெட்

SA-க்கு எதிரான 5 டி20 போட்டிகளில் 4 அரைசதம்! அதிவேகமாக 2,000 டி20 ரன்கள் அடித்து சூர்யா சாதனை!

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவும், ஒருநாள் அணிக்கு கேஎல் ராகுலும், டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டி நேற்று போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது.

சூர்யா மற்றும் ரிங்கு சிங் அதிரடியால் மீண்ட இந்திய அணி!

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு எதிராக ஒரு அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா பவுலர்கள், இந்தியாவின் தொடக்க வீரர்களான கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் 0 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தனர். 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தாலும் அதற்கு பிறகு கைக்கோர்த்த கேப்டன் சூர்யகுமார் மற்றும் திலக் வர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 3வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை திலக் வர்மாவை 29 ரன்னில் வெளியேற்றி பிரித்து வைத்தார் கோட்ஸி.

Rinku Singh

அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் அதற்கு பிறகு ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் ஸ்கை இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியில் மிரட்டிய இரண்டு வீரர்களும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த இந்திய அணி 150 ரன்களை கடந்தது. 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த சூர்யகுமார் 56 ரன்களில் வெளியேறினார். இறுதிவரை களத்தில் இருந்த ரின்கு சிங் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு 68 ரன்கள் அடித்து அசத்த, 19.3 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.

தென்னாப்பிரிக்கா வெற்றி!

மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 152 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி களம் கண்டது தென்னாப்ரிக்கா. தொடக்கம் முதலே அதிரடியாக
விளையாடிய பேட்டர்களால் தென்னாப்ரிக்க அணிக்கு சிறப்பான
தொடக்கம் அமைந்தது.

ப்ரீட்ஸ்கே (Breetzke) 16 ரன்களில் ரன் அவுட் ஆனபோதும், மற்றொரு தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 49 ரன்களும், கேப்டன் மார்க்ரம் 30 ரன்களும் விளாச தென்னாப்ரிக்க அணி வெற்றியை நோக்கி சென்றது. பின்னர் வந்தவர்கள் நிதானமாக விளையாட 14 ஆவது ஓவரில் இலக்கை எட்டி தென்னாப்ரிக்கா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் முகேஷ் குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

அதிவேகமாக 2000 டி20 ரன்கள் அடித்து சூர்யகுமார் சாதனை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த டி20 போட்டியில் அரைசதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ், 56 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 2000 சர்வதேச டி20 ரன்களை எட்டினார். இதன்மூலம் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 2000 டி20 ரன்களை கடந்திருந்த விராட் கோலியின் சாதனையை சமன்செய்துள்ளார் சூர்யகுமார் யாதவ். விராட் கோலியும் 56 இன்னிங்ஸ்களில்தான் 2000 டி20 ரன்களை கடந்திருந்தார்.

Suryakumar Yadav

இந்த பட்டியலில் முதலிரண்டு இடத்தில் பாகிஸ்தானின் ப்ரைம் ஜோடியான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்து முன்னிலை வகிக்கின்றனர். 58 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை அடித்து கேஎல் ராகுல் கடைசி இடத்தில் நீடிக்கிறார்.

SA-க்கு எதிரான 5 டி20 போட்டிகளில் 4 அரைசதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இதுவரை 5 டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கும் சூர்யகுமார் யாதவ், 5 போட்டிகளில் 4 போட்டியில் அரைசதம் அடித்து ஒரு இமாலய சாதனையை படைத்துள்ளார். 5 போட்டிகளில் 50*, 61, 8, 68, 53 என துவம்சம் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஒரு டி20 போட்டியில் அரை சதமடிக்கும் முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

Suryakumar

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த சாதனையை மற்றவீரர்கள் 10 போட்டிகளுக்கு மேல்தான் அடித்துள்ளனர். அந்தவகையில் முகமது ரிஸ்வான் 11 போட்டிகளிலும், ஜானி பேர்ஸ்டோ 13 போட்டிகளிலும், டேவிட் வார்னர் 15 போட்டிகளிலும் மட்டுமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 டி20 அரைசதங்களை அடித்துள்ளனர்.