சிஎஸ்கே அணியில் ஜடேஜாவை தக்கவைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு சுரேஷ் ரெய்னா பதிலளித்துள்ளார். டெவான் கான்வே, விஜய் சங்கர், தீபக் ஹூடா போன்ற வீரர்களை அணி வெளியேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.. மேலும், சஞ்சு சாம்சன் மற்றும் ஜடேஜாவின் டிரேட் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 19ஆவது ஐபிஎல் தொடர் போட்டிக்கு முன்பே, அதுபற்றிய செய்திகள் வேகம்பிடித்து விட்டன. அதிலும், 2026 ஐபிஎல் ஏலம் வரும் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைக்கப்போகின்றன, யாரெல்லாம் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் சமீபத்திய தலைப்புச் செய்தியாக சி.எஸ்.கே. அணியும், ஜடேஜா என்ற பெயருமே இருந்துவருகிறது.
கடந்த 3 ஐபிஎல் சீசன்களாக தோனிக்கு மாற்றுவீரரை தேடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை ராஜஸ்தான் ராயல்ஸின் சஞ்சு சாம்சனை அணிக்குள் எடுத்துவர தீவிரம் காட்டிவருகிறது. அதற்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஜடேஜாவை கூட வெளியேற்ற சிஎஸ்கே நிர்வாகம் முடிவுசெய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
கடைசி அப்டேட்டின் படி சஞ்சு சாம்சனை விடுவிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜடேஜா மற்றும் சாம் கரனை கேட்டு டிமேண்ட் செய்ததாகவும், அதற்கு சென்னை அணியும் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும், கிட்டத்தட்ட டிரேடிங் முடிவுபெற்றுவிட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 48 மணிநேரத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது..
சஞ்சு சாம்சன் மற்றும் ஜடேஜாவின் டிரேட் முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், ஜடேஜா சிஎஸ்கேவில் தக்கவைக்கப்பட வேண்டுமா? வெளியேற்றப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு சுரேஷ் ரெய்னா பதிலளித்துள்ளார்..
சிஎஸ்கே அணியில் யாரெல்லாம் தக்கவைக்க வேண்டும், யார் வெளியேற்றப்பட்ட வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டு சில வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டது. அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா,
நூர் அகமது - நூர் அகமது ஒரு மர்ம சுழற்பந்து வீச்சாளர், எனவே அவரை சிஎஸ்கே தக்கவைக்க வேண்டும்.
எம்எஸ் தோனி - எம்எஸ் இந்த ஆண்டு விளையாடுகிறார் , அதனால் அவர் அணியில் இருக்கவேண்டும்..
ருதுராஜ் கெய்க்வாட் - சிஎஸ்கே கேப்டனாக தொடர வேண்டும்.
டெவோன் கான்வே - சிஎஸ்கே கான்வேவை விடுவிக்க வேண்டும். அணிக்கு ஒரு உள்ளூர் தொடக்க வீரர் தேவை, அதை அவர்கள் மினி-ஏலத்தில் தேடுவார்கள்.
விஜய் சங்கர் - அவர் ஏற்கனவே நிறைய வாய்ப்புகளைப் பெற்றுள்ளார். எனவே சிஎஸ்கே அவரையும் விடுவிக்க வேண்டும்.
தீபக் ஹூடா - நிச்சயம் விடுவிடுத்து வேறு வீரரை தேடவேண்டும். மினி-ஏலத்தில் அணிக்கு சரியான கலவையை வழங்கக்கூடிய நிறைய வீரர்கள் உள்ளனர். இந்த வீரர்கள் கடந்த ஆண்டு நிறைய வாய்ப்புகளைப் பெற்றபோதும் எப்படி விளையாடினார்கள் என்பதை நாம் பார்த்தோம்.
ரவீந்திர ஜடேஜா - ஜடேஜாவை மீண்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர் சிஎஸ்கே அணிக்காக சிறந்த வீரராக இருந்துள்ளார். உண்மையில் பல ஆண்டுகள் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். எனவே 'சர் ரவீந்திர ஜடேஜா' நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியுள்ளார்..