மேத்யூ ப்ரீட்ஸ்கே x
கிரிக்கெட்

‘ஆரம்பமே தெறி!’ யாருமே படைக்காத சாதனை.. அறிமுகப் போட்டியிலேயே வரலாறு படைத்த தென்னாப்ரிக்க வீரர்!

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை யாருமே படைக்காத சாதனையை முதல் வீரராக தென்னாப்பிரிக்காவின் மேத்யூ ப்ரீட்ஸ்கே படைத்துள்ளார்.

Rishan Vengai

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாகிஸ்தானில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடந்துவருகிறது. இதில் ஒரு அணி மற்ற இரு அணிகளுடன் தலா ஒருமுறை மோதும், எந்த அணி முதலிரண்டு இடங்களை பிடிக்கிறதோ அவ்வணிகள் இறுதிப்போட்டியில் மோதும்வகையில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

new zealand - south africa - pakistan

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாவது போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.

ODI கிரிக்கெட்டில் புதிய வரலாறு..

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பாகிஸ்தான் ஆடுகளங்களில் நிலைமையை சரியாக புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால், மூன்று அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றன.

அந்தவகையில் தென்னாப்பிரிக்கா அணி டெம்பா பவுமா தலைமையில் இளம்வீரர்களை களத்தில் இறக்கி பரிசோதித்து வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்கா சார்பில் ஈதன் போச், மேத்யூ ப்ரீட்ஸ்கே, செனுரன் முத்துசாமி மற்றும் மிஹ்லாலி மபோங்வானா முதலிய 4 வீரர்கள் அறிமுக போட்டியில் களம்கண்டனர்.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் தொடங்க வீரராக களமிறங்கிய மேத்யூ ப்ரீட்ஸ்கே, 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என துவம்சம் செய்து 150 ரன்கள் அடித்து அறிமுக போட்டியிலேயே அனைவரையும் பிரமிக்க வைத்தார். அவரின் அசாத்தியமான பேட்டிங்கின் உதவியால் 304 ரன்களை குவித்தது தென்னாப்பிரிக்கா.

இதன்மூலம் அறிமுக ஒருநாள் போட்டியிலேயே 150 ரன்கள் அடித்த முதல் சர்வதேச வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் 1978-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ் அறிமுக போட்டியில் அடித்த அதிகபட்ச ஸ்கோரான 148 ரன்களை 47 வருடங்களுக்கு பிறகு முறியடித்துள்ளார்.