அயர்லாந்து| குத்துச்சண்டை போட்டியின் போது காயமடைந்த 28 வயது வீரர் மரணம்!
அயர்லாந்து பெல்பாஸ்டில் கடந்த 1-ம் தேதி நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெல்ஷ் நாட்டைச் சேர்ந்த நாதன் ஹோவெல்ஸ் மற்றும் அயர்லாந்தை சேர்ந்த ஜான் கூனி (வயது 28) வீரர்கள் மோதினர்.
அப்போது 9வது சுற்றின்போது எதிர்த்து விளையாடிய வீரர் தாக்கியதில் ஜான் கூனி காயமடைந்தார். அவரால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனதால், போட்டி 9வது சுற்றோடு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் காயமடைந்த ஜான் கூனி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம்..
மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 28 வயதான ஜான் கூனியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதனை சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த சூழலில் ஒரு வார காலம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஜான் கூனியின் குடும்பத்திற்கும், சக குத்துச்சண்டை வீரர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் உலக சாம்பியன் பாரி மெக்குயிகன் பேசுகையில், "தனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் பிரைம் நிலையில் இருந்த 28 வயது இளைஞருக்கு இப்படி நடந்தது பயங்கரமானது, இதை நம்புவது கடினமாக இருக்கிறது" என்று கூறினார்.