வைபவ் சூர்யவன்ஷி web
கிரிக்கெட்

"போய் பந்தைப் போடு” - சீண்டிய பாகிஸ்தான் பவுலருக்கு பவுண்டரியில் பதிலடி கொடுத்த சூர்யவன்ஷி

ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் லீக் போட்டியில் நேற்று வைபவ் சூர்யவன்ஷிக்கும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

Prakash J

ஏசிசி ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில், இந்தியா ஏ அணியின் வைபவ் சூர்யவன்ஷிக்கும் பாகிஸ்தான் பவுலர் உபைத் ஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'போய் பந்தைப் போடு' என்று பதிலடி கொடுத்த வைபவ், அடுத்த பந்தை பவுண்டரிக்கு அடித்து வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ஏசிசி ஆண்கள் ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் 2025 தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்தியா ஏ, ஆப்கானிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஹாங்ஹாங், ஐக்கிய அரபு, பாகிஸ்தான் ஷாகீன்ஸ் ஆகிய 8 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. இதில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான இந்திய ஏ அணி பி பிரிவில் இடம்பிடித்துள்ளது. இவ்வணியில், கடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் களமிறங்கி அதிரடி சதமடித்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்துள்ளார். தவிர, இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அணிக்கு எதிராக 144 ரன்கள் குவித்தார். இந்த நிலையில், இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் நேற்று லீக் போட்டி நடைபெற்றது.

vaibhav suryavanshi

இதில் முதல் பேட் செய்த இந்திய அணி, 19 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதிலும் சூர்யவன்ஷி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால், பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

முன்னதாக, இந்தப் போட்டியில் பேட் செய்துகொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷிக்கும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உபைத் ஷாவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. தொடக்கத்தில், உபெய்த் ஷா வீசிய பந்தை வைபவ் அடிக்கத் தவறினார். அப்போது, உபெய்த் ஷா ஏதோ கூறி வைபவைச் சீண்டினார். அதற்குச் சற்றும் அசராத வைபவ் சூர்யவன்ஷி ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்கும் வகையில், "போய் பந்தைப் போடு.. பந்தைப் போடு" என்று பதிலடி கொடுத்தார்.

ind vs pak

அதை சொன்னதோடு நிறுத்தவில்லை. அடுத்த பந்தை, கவர் திசைக்கு மேல் ஒரு புயல் வேக பவுண்டரிக்கு விரட்டியதுடன், பேட்டை உயர்த்திப் பிடித்து ஸ்டைலாக போஸ் கொடுத்தார். இது, உபெய்த் ஷாவை மேலும் கடுப்பேற்றியது. பாகிஸ்தான் - இந்திய கிரிக்கெட் உறவு ஏற்கெனவே சிக்கலான சூழலில் இருக்கும் நிலையில், வைபவ் மற்றும் உபைத் ஷாவின் இந்த மோதலும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.